மழை வெள்ளம் எதிரொலி: 40 நீண்டதூர ரெயில் சேவை ரத்து


மழை வெள்ளம் எதிரொலி: 40 நீண்டதூர ரெயில் சேவை ரத்து
x
தினத்தந்தி 10 July 2018 9:44 PM GMT (Updated: 10 July 2018 9:44 PM GMT)

மழை வெள்ளம் காரணமாக 40 நீண்டதூர ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

மும்பை,

மும்பையில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக நேற்று மின்சார ரெயில் மற்றும் நீண்டதூர ரெயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ரெயில் நிலையங்களையும், தண்டவாளங்களையும் வெள்ளம் சூழ்ந்தது. மும்பையில் பாந்திரா டெர்மினஸ் மற்றும் மும்பை சென்டிரல் ரெயில் நிலையங்களில் இருந்து மேற்கு ரெயில்வே சார்பில் நீண்டதூர ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மழை வெள்ளம் காரணமாக மேற்கு ரெயில்வே தனது வழித்தடத்தில் இயக்கப்படும் 35 நீண்டதூர ரெயில் சேவைகளை நேற்று ரத்து செய்தது. இந்த ரெயில்கள் மும்பையில் இருந்து டெல்லி, ஆமதாபாத், வல்சாட், டேராடூன், பிரோஸ்பூர், சூரத், ஒகா, ராஜ்கோட், இந்தூர், ஜெய்ப்பூர், ஆமதாபாத் உள்ளிட்ட வட மாநில நகரங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து மும்பை வரும் ரெயில்கள் ஆகும்.

மத்திய ரெயில்வே மும்பை- புனே இடையே இயக்கப்படும் இந்திராயணி, டெக்கான் குயின் உள்பட 5 ரெயில்களை ரத்து செய்தது.

தூத்துக்குடியில் இருந்து வசாய்ரோடு, கல்யாண் வழியாக ஒகா செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் இகத்புரி- மன்மாட்- ஜல்காவ் வழியாகவும், திருநெல்வேலி- ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ஜல்காவ் வழியாகவும் திருப்பி விடப்பட்டன. இதேபோல மேலும் சில ரெயில்கள் வேறுபாதைகள் வழியாக இயக்கப்பட்டன.

Next Story