பஸ் மீது கல்வீசிய 3 பேர் கைது; தொழிலாளியிடம் பணம் பறிக்க முயன்றதாகவும் புகார்
மானூர் அருகே அரசு பஸ்கள் மீது கல்வீசி தாக்கியதுடன், தொழிலாளியிடம் அரிவாளை காட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மானூர்,
பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் ஜான் பாண்டியன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக தேவேந்தில குல வேளாளர் கூட்டமைப்பு இளைஞர் அணி நிர்வாகியும், பசுபதி பாண்டியன் ஆதரவாளருமான தச்சநல்லூரை சேர்ந்த கண்ணபிரான், மானூர் அருகே உள்ள பள்ளமடையை சேர்ந்த பாலமுருகன் (வயது 27), மாவடியை சேர்ந்த பன்னீர்முருகன் (27) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு பஸ்கள் மீது கல் வீசினர். இதில் 24 பஸ்கள் சேதமடைந்தன.
இந்தநிலையில் நெல்லை சந்திப்பில் இருந்து நேற்று முன்தினம் இரவு கீழப்பிள்ளையார்குளம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு டவுன் பஸ் மீது மர்மநபர்கள் கல் வீசினர். இதில் பஸ்சின் முன்புற கண்ணாடி உடைந்தது. பின்னர் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் தப்பி ஓடிய மர்மநபர்கள், கால்நடை மருத்துவ கல்லூரியின் அருகே வேப்பன்குளம் விலக்கில் ஆலங்குளத்தில் இருந்து மானூர் வழியாக நெல்லைக்கு வந்து கொண்டிருந்த மற்றொரு அரசு பஸ் மீதும் கல்வீசினர். இந்த பஸ் கண்ணாடியும் உடைந்தது.
தொடர்ந்து அந்த மர்மநபர்கள், ராமையன்பட்டி விலக்கில் நின்று கொண்டிருந்த தொழிலாளி தங்கபாண்டி (50) என்பவரிடம் அரிவாளை காட்டி பணம் பறிக்க முயன்றனர்.
இதுகுறித்து பஸ் டிரைவர்கள் மாவடியை சேர்ந்த ராஜ்குமார் (43), கானார்பட்டியை சேர்ந்த லிவிங்ஸ்டன் (47) மற்றும் கம்மாளங்குளத்தை சேர்ந்த தங்கபாண்டி ஆகியோர் மானூர் போலீசில் புகார் செய்தனர். புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கம்மாளங்குளத்தை சேர்ந்த முத்து மகன் அஜித் (23), கணேசன் மகன் மகராஜன் (23), மாடசாமி மகன் மற்றொரு மகராஜன் (34) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் பல்வேறு இடங்களில் பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்ட சம்பவங்களில் பலரை போலீசார் தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story