விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ததில் ரூ.13 லட்சம் மோசடி


விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ததில் ரூ.13 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 10 July 2018 10:23 PM GMT (Updated: 10 July 2018 10:23 PM GMT)

கள்ளக்குறிச்சி அருகே விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ததில் ரூ.13 லட்சம் மோசடி செய்த 2 வியாபாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விழுப்புரம்,  

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த மேலூர் அருகே உள்ள கீழ்பூண்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் பழனிமுத்து (வயது 51), விவசாயி. இவர் மற்றும் இவருக்கு தெரிந்த விவசாயிகள் சிலரின் நிலத்தில் விளைந்த நெல் மூட்டைகளை வியாபாரிகளான கள்ளக்குறிச்சி அருகே எலவடி கிராமத்தை சேர்ந்த சுரேஷ், சின்னசேலம் செந்தில்முருகன் ஆகியோர் கொள்முதல் செய்தனர். அதாவது 75 கிலோ எடை கொண்ட 1,660 நெல் மூட்டைகளை ரூ.16 லட்சத்து 4 ஆயிரத்து 858-க்கு கொள்முதல் செய்வதாக கூறி விவசாயிகளிடம் சுரேஷ், செந்தில்முருகன் ஆகியோர் விலை நிர்ணயம் செய்தனர்.

இதையடுத்து இருவரும் முன்பணமாக ரூ.3 லட்சத்தை மட்டும் விவசாயிகளிடம் கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ.13 லட்சத்து 4 ஆயிரத்து 858-ஐ ஓரிரு வாரங்களில் தருவதாக கூறி நெல் மூட்டைகளை பெற்றுச்சென்றனர்.

ஆனால் அவர்கள் இருவரும் நெல் மூட்டைகளுக்குரிய பணத்தை கொடுக்காமல் விவசாயிகளை ஏமாற்றி வந்தனர். பலமுறை விவசாயிகள் சென்று கேட்டதற்கு அவர்களை சுரேஷ், செந்தில்முருகன் ஆகிய இருவரும் சேர்ந்து தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து வந்ததோடு பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் பழனிமுத்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் சுரேஷ், செந்தில்முருகன் ஆகியோர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story