வாக்குச்சாவடிகள் பிரிப்பு தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம்


வாக்குச்சாவடிகள் பிரிப்பு தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம்
x
தினத்தந்தி 10 July 2018 11:52 PM GMT (Updated: 10 July 2018 11:52 PM GMT)

வாக்குச்சாவடிகள் பிரிப்பு தொடர்பாக சப்-கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது

கடலூர், .

கடலூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சப்-கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பேசியதாவது:-

கடலூர் வருவாய் கோட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி ஆகிய 4 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் நகர் புறங்களில் 1,400 வாக்காளர்களுக்கு அதிகமாகவும், கிராமப்புறங்களில் 1,200 வாக்காளர்களுக்கு அதிகமாகவும் இருந்த வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு உள்ளன. அதன்படி நெய்வேலி தொகுதியில் 5 வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு கூடுதலாக 5 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் நெய்வேலி தொகுதியில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 226-ல் இருந்து 231 ஆக உயர்ந்து உள்ளது.

பண்ருட்டி தொகுதியில் புதிதாக 6 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 251-ல் இருந்து 257 ஆக உயர்ந்து உள்ளது. குறிஞ்சிப்பாடி தொகுதியில் புதிதாக 4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 251-ல் இருந்து 255 ஆக உயர்ந்து உள்ளது.

கடலூரில் வாக்குச்சாவடிகள் எதுவும் பிரிக்கப்பட வில்லை. கடலூர் சுப்புராயலுநகரில் இருந்த வாக்குச்சாவடி அதேபகுதியில் உள்ள நெடுஞ்சாலைநகருக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதேப்போல் நெய்வேலி தொகுதியில் 7 வாக்குச்சாவடி மையங்களும், பண்ருட்டி தொகுதியில் 9 வாக்குச்சாவடி மையங்களும், குறிஞ்சிப்பாடி தொகுதியில் 12 வாக்குச்சாவடி மையங்களும் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளன.

இவ்வாறு சப்-கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கூறினார்.

இதற்கு அனைத்துக்கட்சியினர் ஒப்புதல் அளித்தனர். இக்கூட்டத்தில் அ.தி.மு.க. நகர செயலாளர் குமரன், தி.மு.க. நகர செயலாளர் ராஜா, நகர காங்கிரஸ் தலைவர் குமார், நகர பா.ஜனதா தலைவர் வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணைச்செயலாளர் குளோப் மற்றும் அனைத்துக்கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

Next Story