செங்கோட்டை அருகே தண்டவாளத்தில் மரம் விழுந்தது; பாலருவி எக்ஸ்பிரஸ் தப்பியது டிரைவரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்ப்பு
செங்கோட்டை அருகே ரெயில் தண்டவாளத்தில் ராட்சத மரம் விழுந்து கிடந்தது. டிரைவரின் சாமர்த்தியத்தால் பாலருவி எக்ஸ்பிரஸ் விபத்தில் இருந்து தப்பியது.
செங்கோட்டை,
செங்கோட்டை அருகே ரெயில் தண்டவாளத்தில் ராட்சத மரம் விழுந்து கிடந்தது. டிரைவரின் சாமர்த்தியத்தால் பாலருவி எக்ஸ்பிரஸ் விபத்தில் இருந்து தப்பியது.
பாலருவி எக்ஸ்பிரஸ்
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து புனலூர் வரை இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 9–ந் தேதி முதல் நெல்லை வரை நீட்டித்து இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு 12.30 மணிக்கு பாலருவி எக்ஸ்பிரஸ் கொல்லத்தில் இருந்து புறப்பட்டு செங்கோட்டையை நோக்கி வந்து கொண்டிருந்தது. நேற்று அதிகாலை 3 மணி அளவில் செங்கோட்டைக்கு முன்னதாக பகவதிபுரம் அருகே உக்கணம் என்ற இடத்தில் காட்டுப் பகுதியில் ரெயில் வந்தது.
அப்போது தண்டவாளத்தில் ராட்சத மரம் ஒன்று விழுந்து குறுக்காக கிடந்தது. இதனை சற்று தூரத்தில் இருந்தே என்ஜின் டிரைவர் கவனித்து விட்டார். உடனே சாமர்த்தியமாக செயல்பட்டு ரெயில் என்ஜினை நிறுத்தினார்.
மீட்பு பணி
இதுகுறித்து பகவதிபுரம் ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ரெயில்வே ஊழியர்கள் வந்து, பொதுமக்கள் உதவியுடன், தண்டவாளத்தில் கிடந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் செங்கோட்டை ரெயில் நிலைய ஊழியர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது சாரல் மழை பெய்து கொண்டிருந்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. அதிகாலை நேரம் என்பதாலும், காட்டுப் பகுதியில் ரெயில் நின்றதாலும் பயணிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகினர்.
மரம் அறுக்கும் எந்திரம் மூலம் ரெயில்வே ஊழியர்கள், மரத்தை துண்டு துண்டாக அறுத்து தண்டவாளத்தில் இருந்து அகற்றினர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மரத்தின் பாகங்கள் முழுமையாக தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதையடுத்து பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து செங்கோட்டையை நோக்கி புறப்பட்டது.
விபத்து தவிர்ப்பு
செங்கோட்டைக்கு அதிகாலை 3.50 மணிக்கு வர வேண்டிய பாலருவி எக்ஸ்பிரஸ், 3 மணி நேரம் தாமதமாக காலை 6.50 மணிக்கு செங்கோட்டையை வந்தடைந்தது. பின்னர் 7 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு, 2¾ மணி நேரம் தாமதமாக நெல்லைக்கு 9.15 மணிக்கு வந்து சேர்ந்தது.
டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்று கூறிய பயணிகள், சரியான நேரத்தில் சாதுர்யமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்திய டிரைவருக்கு நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story