உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்


உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி  கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 11 July 2018 10:00 PM GMT (Updated: 11 July 2018 1:24 PM GMT)

பாளையங்கோட்டையில் நடந்த உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

நெல்லை, 

பாளையங்கோட்டையில் நடந்த உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு பேரணி 

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி பாளையங்கோட்டை லூர்துநாதன் சிலை முன்பு நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி கொடியசைத்து, பேரணியை தொடங்கி வைத்தார். முன்னதாக உலக மக்கள் தொகை குறித்த உறுதிமொழியினை கலெக்டர் ஷில்பா தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

அப்போது கலெக்டர் ஷில்பா கூறியதாவது:–

தமிழக அரசு பல்வேறு திட்டங்களை மக்கள் திட்டமாக வகுத்து செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மகப்பேறு நிதிஉதவி திட்டம், ஒருங்கிணைந்த விரிவுப்படுத்தப்பட்ட முதல்–அமைச்சர் காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தீட்டி மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது.

சுற்றுச்சூழல், சுகாதாரம் 

இந்த திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் கிடைத்திட ஏதுவாகவும், மக்களுக்கு தேவையான உணவு, உடை, இருப்பிடம், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், பாதுகாப்பு, போக்குவரத்து, சுற்றுச்சூழல், சுகாதாரம் ஆகியவை மக்களுக்கு சரியான விகிதத்தில் கிடைக்க மக்கள் தொகை கட்டுப்பாடு மிகுந்த அவசியமாக இருக்கிறது. இந்த கட்டுப்படுத்தும் அவசியத்தை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 11–ந் தேதியை உலக மக்கள் தொகை தினமாக நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேரணியில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் இளங்கோ, நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் கண்ணன், துணை முதல்வர் டாக்டர் ரேவதி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் மற்றும் சாரதா கல்லூரி மாணவிகள், அரசு மருத்துவமனை நர்சிங் கல்லூரி மாணவிகள், கிறிஸ்துராஜா மற்றும் குழந்தை ஏசு பள்ளி மாணவ–மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story