ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்கக்கோரி கட்டிட தொழிலாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் கட்டிட தொழிலாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்,
சேலம் ஜில்லா கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், கிடப்பில் உள்ள கட்டுமான நல நிதி ரூ.1,633 கோடியை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதை ஓய்வூதிய வயதாக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் மயில்வேலன் தலைமையில் நடந்த இந்த தர்ணா போராட்டத்தில் மாவட்ட தலைவர் கருப்பண்ணன், நிர்வாகிகள் பழனிசாமி, தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த தர்ணா போராட்டத்தில், அகில இந்திய கட்டிட கட்டுமான தொழிலாளர் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தை செயல்படுத்த வேண்டும், விபத்து எங்கு நடந்தாலும் விபத்து நிவாரணம் ரூ.5 லட்சமும், இயற்கை மரண உதவி ரூ.1 லட்சமும் வழங்க வேண்டும், திருமண உதவி தொகை ரூ.25 ஆயிரம், மகப்பேறு உதவி நிதி ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும்.
கல்வி உதவி நிதிகளை இரட்டிப்பாக உயர்த்தி வழங்க வேண்டும், மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் அதிகாரி மற்றும் நலவாரிய தலைமை அலுவலகம், மாவட்ட நலவாரிய அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும், 60 வயது பூர்த்தியான நாளில் இருந்து நிலுவை தொகையுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதுகுறித்து சேலம் ஜில்லா கட்டிட தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கருப்பண்ணன் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் சுமார் 70 லட்சத்திற்கும் அதிகமானோர் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயத்திற்கு அடுத்து அதிகப்படியான தொழிலாளர்கள் ஈடுபடும் தொழிலாக கட்டுமான தொழில் உள்ளது.
கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் 28 லட்சத்து 21 ஆயிரம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால் திருமணம், ஓய்வூதியம், விபத்து மரணம், இயற்கை மரணம் போன்ற பல்வேறு உதவிகளை கேட்டு மனு அளித்தும் சரியான முறையில் பணப்பயன்கள் கிடைக்கவில்லை. எனவே, கட்டிட தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும், என்றார்.