டெல்லி பேரணியில் ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க கோரி பிரதமரிடம் மனு


டெல்லி பேரணியில் ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க கோரி பிரதமரிடம் மனு
x
தினத்தந்தி 12 July 2018 4:15 AM IST (Updated: 12 July 2018 12:14 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி பேரணியில் ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க கோரி பிரதமரிடம் மனு கொடுப்போம் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

திருச்சி,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவரும், அகில இந்திய வணிகர்கள் சம்மேளனத்தின் தேசிய முதன்மை துணை தலைவருமான ஏ.எம். விக்கிரம ராஜா நேற்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வரலாற்று சிறப்புமிக்க காந்திமார்க்கெட்டை கள்ளிக்குடி பகுதிக்கு மாற்றும் அறிவிப்பு கடந்த ஓராண்டு காலமாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

காந்திமார்க்கெட் இடம் மாற்றம் செய்யப்பட்டால் 3 ஆயிரம் வியாபாரிகள் மற்றும் அவர்களை சார்ந்து இருக்க கூடிய 30 ஆயிரம் குடும்பத்தினர், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த பிரச்சினை தொடர்பாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் விரைவில் தமிழக முதல் - அமைச்சரை சந்தித்து பேச இருக்கிறோம்.

டெல்லியில் வருகிற 23, 24 மற்றும் 25-ந்தேதிகளில் அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் பேரணி மற்றும் மாநாடு நடைபெற உள்ளது. 28 மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கவேண்டும், 5 மற்றும் 12 சதவீத ஜி.எஸ்.டி. வரி மட்டுமே வசூலிக்க வேண்டும். இப்படி செய்தால் தான் வரி ஏய்ப்பை தடுக்க முடியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த அவற்றை ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டு வரவேண்டும், 60 வயதான வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். பேரணி முடிவில் பிரதமர் மோடியை சந்தித்து மனு கொடுக்க இருக்கிறோம்.

ஆன்லைன் வர்த்தகத்தினால் அமெரிக்காவில் ஏராளமான கடைகள் மூடப்பட்டு விட்டன. தமிழகத்திலும் அது போன்ற நிலை ஏற்படாமல் இருக்க ஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை விதிக்கவேண்டும். தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்கூடங்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. இவற்றை திறக்க முதல் அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் போட்டி போட்டுக்கொண்டு தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி கொடுத்து வருகிறார்கள். அதுபோன்ற ஒரு சூழலை தமிழகத்திலும் ஏற்படுத்த வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வணிகர்களின் சக்தி என்ன என்பதை காட்ட இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாநில பொதுச்செயலாளர் வெ. கோவிந்தராஜுலு உடன் இருந்தார். 

Next Story