ஓ.என்.ஜி.சி. நிறுவன கூடாரத்தில் தீ; பல லட்சம் ரூபாய் பொருட்கள் நாசம்


ஓ.என்.ஜி.சி. நிறுவன கூடாரத்தில் தீ; பல லட்சம் ரூபாய் பொருட்கள் நாசம்
x
தினத்தந்தி 11 July 2018 11:15 PM GMT (Updated: 11 July 2018 6:55 PM GMT)

முத்துப்பேட்டை அருகே ஓ.என்.ஜி.சி. நிறுவன கூடாரத்தில் தீ பிடித்ததில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தது. இதற்கு சதித்திட்டம் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள விளாங்காடு பகுதியில் ஏற்கனவே நீண்டகாலமாக ஓ.என்.ஜி.சி. எண்ணெய் நிறுவன முகாம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில் இதன் அருகே உள்ள இடும்பாவனம் மங்களநாயகிபுரம் பகுதியில் ஓ.என்.ஜி.சி. சார்பில் சமீபத்தில் புதியதாக இடம் தேர்வு செய்து எரிவாயு எடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த காண்டிராக்டர் ராமலிங்கம் என்பவர் தலைமையில், பணியாளர்கள் அங்கு கூடாரம் அமைத்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெரிய அளவில் கீற்றால் அமைக்கப்பட்டுள்ள அந்த கூடாரத்தில் சிமெண்டு மூட்டைகள், தேவையான பொருட்கள் அங்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை திடீரென கீற்று கொட்டகையில் தீ பிடித்தது.

சில நொடிகளில் தீ மளமளவென்று பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனையடுத்து அங்கு தங்கி இருந்தவர்கள் முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே கீற்று கொட்டகை முழுவதும் எரிந்து சாம்பலானது. இதில் 1,500 சிமெண்டு மூட்டைகள் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

ஓ.என்.ஜி.சி. கூடாரத்தில் தீப்பிடித்து எரிந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் தீவிபத்து நடந்த பகுதியை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஓ.என்.ஜி.சி. நிறுவன மேற்பார்வையாளர் தரங்கம்பாடியை சேர்ந்த நிசாந்த், முத்துப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், கூடாரத்தில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தபோது யாரோ மர்ம நபர்கள் வந்து வேண்டுமென்றே தீவைத்து விட்டு சென்று விட்டதாகவும், அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் படியும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கூடாரத்தில் தீபிடித்தது யதார்த்தமாக நடந்ததா? அல்லது சதி வேலை எதுவும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் முத்துப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story