உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 11 July 2018 10:30 PM GMT (Updated: 11 July 2018 7:09 PM GMT)

அரியலூரில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் விஜயலட்சுமி தொடங்கி வைத்தார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நல துறையின் சார்பில், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. அரியலூர் அண்ணா சிலை அருகே தொடங்கிய இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று அரியலூர் அரசு மருத்துவமனையில் முடிவடைந்தது.

முன்னதாக கலெக்டர் விஜயலட்சுமி பேசுகையில்,

அரியலூர் மாவட்டத்தில் 2017-ம் ஆண்டில் பிறந்த 7,797 குழந்தைகளில் 863 (11.9 சதவீதம்) குழந்தைகள் 3-ம் அதற்கு மேற்பட்ட பிறப்பு வரிசையாக உள்ளது. இத்தகைய குழந்தை பிறப்பு தவிர்க்கப்பட வேண்டும். தம்பதியருக்கு குடும்ப நலம் குறித்து தெளிவு ஏற்படுத்துவது அவசியம். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த, திருமண வயது பெண்ணுக்கு 21-க்கு மேல் என்பதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். ஆணோ, பெண்ணோ குடும்பத்திற்கு ஒரு குழந்தை போதும், ஆண், பெண் வேறுபாடு கருதக்கூடாது, ஆணுக்கு நிகராக பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க வேண்டும். தற்காப்புடன் வாழ வழி காணவேண்டும், அளவான குடும்பம் அமைக்க, தம்பதியர் சுயமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்றார். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் உலக மக்கள் தொகை தின உறுதிமொழி எடுத்து கொண்டனர். 

Next Story