மாவட்ட செய்திகள்

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் + "||" + Villupuram Disabilities The struggle standby

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம்,

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நேற்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கண்டமங்கலம் ஒன்றிய தலைவர் மகாலிங்கம், வட்ட தலைவர்கள் வானூர் வேணு, திண்டிவனம் தினகரன், விழுப்புரம் பிரபு, மயிலம் ஒன்றியக்குழு உறுப்பினர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தன். மாநில செயலாளர் ஜீவா சிறப்புரையாற்றினார்.

40 சதவீதம் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் உள்பட உதவித்தொகை கோரி விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும், உபகரணங்கள், கருவிகள், 3 சக்கர வாகனங்கள், அரசு வழங்கும் ஸ்கூட்டர் ஆகியவற்றை விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உடனே வழங்க வேண்டும், பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், தமிழக அரசின் பசுமை வீடு வழங்கும் திட்டம் ஆகியவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத முன்னுரிமைப்படி இலவச வீடுகளை வழங்க வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட பொருளாளர் யுவராஜ், துணை செயலாளர் முருகன், துணைத்தலைவர் சுப்பராயன், நிர்வாகிகள் கலைவாணன், சேகர், பூபாலன், துக்காராம், நாகலிங்கம் உள்பட பலர் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.

இவர்கள் அனைவரும் மாலை வரை தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். அதன் பிறகு அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறியதன்பேரில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.