சிகாரிப்புரா தாலுகாவில் சம்பவம் : மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.4 லட்சம் திருட்டு


சிகாரிப்புரா தாலுகாவில் சம்பவம் : மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.4 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 12 July 2018 3:15 AM IST (Updated: 12 July 2018 1:42 AM IST)
t-max-icont-min-icon

சிகாரிப்புரா தாலுகாவில் நடந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.4 லட்சம் திருடப்பட்டது.

சிவமொக்கா,

சிகாரிப்புரா தாலுகாவில், மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.4 லட்சத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச்சென்றுவிட்டார். கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபரின் உருவத்தை வைத்து போலீசார் அவரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா பேகூரு கிராமத்தைச் சேர்ந்தவர் புலிகேசி. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். நேற்று முன்தினம் புலிகேசிக்கு பணம் தேவைப்பட்டது. இதனால் அவர் தனது மோட்டார் சைக்கிளில் வங்கிக்கு சென்றார். பின்னர் வங்கியில் இருந்து ரூ.4 லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார்.

பணத்தை வண்டியில் வைத்த அவர், அங்குள்ள டீக்கடைக்கு சென்றார். இதை கவனித்துக் கொண்டிருந்த யாரோ மர்ம நபர் வண்டியில் இருந்து ரூ.4 லட்சத்தை திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். சிறிது நேரத்தில் வண்டியை எடுக்க வந்த புலிகேசி, பணம் திருட்டுப்போய் உள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர் இதுபற்றி சிகாரிப்புரா டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் வங்கி முன்பு இருந்த கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி அதில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது புலிகேசி பணத்தை மோட்டார் சைக்கிளில் உள்ள ‘டேங்க் கவரில்’ வைத்துவிட்டு செல்லும் காட்சியும், பின்னர் அதை யாரோ மர்ம நபர் திருடிச் செல்லும் காட்சியும் தெளிவாக பதிவாகி இருந்தது.

இதையடுத்து போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த மர்ம நபரின் உருவத்தை வைத்து அவரை வலைவீசி தேடிவருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story