ஸ்டெர்லைட் பிரச்சினையில் தூங்கிய தமிழக அரசு பசுமை வழிச்சாலை திட்டத்தில் விழித்துக்கொண்டுள்ளது


ஸ்டெர்லைட் பிரச்சினையில் தூங்கிய தமிழக அரசு பசுமை வழிச்சாலை திட்டத்தில் விழித்துக்கொண்டுள்ளது
x
தினத்தந்தி 12 July 2018 4:45 AM IST (Updated: 12 July 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் பிரச்சினையில் தூங்கிய தமிழக அரசு சேலம்-சென்னை பசுமைவழிச்சாலை திட்டத்தில் விழித்துக்கொண்டு உள்ளது என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் உள்ள பா.ஜ.க. மாநகர அலுவலகத்தில் மாமன்னன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளையொட்டி அவருடைய படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் பண்ணைவயல் இளங்கோ தலைமையில் நேற்று நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.ராமலிங்கம், மாவட்ட செயலாளர் ஜெய்சதீஷ், பொதுச்செயலாளர் உமாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர தலைவர் விநாயகம் வரவேற்றார். நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு அழகுமுத்துக்கோன் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கோட்ட தலைவர் பாலசெல்வம், ஒன்றிய தலைவர் ராஜேஸ்வரன், பொருளாளர் ரெங்கராஜன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் எச்.ராஜா, நிருபர்களிடம் கூறியதாவது:-

முந்தைய காலத்தில் நாட்டை ஆண்ட மன்னர்கள் கலாசாரம், பண்பாடு, தேசியம், தெய்வீகம் காக்க பாடுபட்டனர். அவ்வாறு பாடுபட்டு வீரமரணம் அடைந்தவர் மாவீரன் அழகுமுத்துகோன். அவருடைய வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். முத்துராமலிங்கத்தேவர் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியது தவறு. அதை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். அழகுமுத்துக்கோனுக்கு தபால்தலை வெளியிட மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்.

சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சிலருக்கு அச்சம் உள்ளது. இதற்கு முன்பு தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது விவசாய நிலங்கள் 3,800 எக்டேர் கையகப்படுத்தப் பட்டது. ஆனால் தற்போது கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்கள் 400 எக்டேர் தான். அவ்வாறு கையகப்படுத்தப்படும் நிலங் களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.

நாட்டின் முன்னேற்றத்துக்கு நிலம் அளிக்கும் விவசாயிகள் நிர்க்கதியாக விடப்படமாட்டார்கள். விவசாயிகள் அந்த திட்டத்துக்கு எதிராக செயல்படவில்லை. ஒரு சிலரை தூண்டி விட்டு தி.மு.க. மற்றும் சமூக விரோத சக்திகள் பதற்றமான சூழ்நிலையை உருவாக்க முயற்சி செய்கிறது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு உள்ளது என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினையில் தூங்கிய தமிழக அரசு, இந்த திட்டத்தில் விழித்துக்கொண்டுள்ளது.

அரசு திட்டங்களுக்கு எதிராக பிரச்சினையை கிளப்புபவர்கள், அவர்களுக்கு பண உதவி செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு இதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா கூறியதை நான் அப்படியே மொழிபெயர்த்தேன். நான் திருத்திக்கூறியதாக கூறுகிறார்கள். நான் வழக்கத்தில் உள்ளதைத்தான் கூறினேன். சிறு நீர்ப்பாசன திட்டம் என்று தான் தெரிவித்தேன். ஆனால் அதை தவறாக கூறுகிறார்கள். இது குறித்து வலைதளங்களில் தவறாக பரப்புகிறார்கள். அதற்கு தி.மு.க. பண உதவி செய்கிறது.

தமிழகம் தொழில்துறையில் 15-வது இடத்தில் உள்ளது. இதற்கு அரசு மட்டும் காரணம் அல்ல. பிரிவினை வாதத்தை ஏற்படுத்த நக்சல்களும் காரணம். இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சில அரசியல் கட்சியினர், மற்றும் நக்சல்கள் அமைப்பினரின் மாயாஜல வார்த்தைகளை நம்ப வேண்டாம்.

தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியை பலப்படுத்தி வருகிறோம். கூட்டணி குறித்து அக்டோபர் மாதத்துக்கு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று தேசிய தலைவர் அமித்ஷாவே கூறி உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story