சிக்கமகளூரு மாவட்டத்தில் தொடர் கனமழை


சிக்கமகளூரு மாவட்டத்தில் தொடர் கனமழை
x
தினத்தந்தி 11 July 2018 10:15 PM GMT (Updated: 11 July 2018 8:24 PM GMT)

தொடர் கனமழையினால் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வாலிபர் அடித்து செல்லப்பட்டார்.

சிக்கமகளூரு,

சிக்கமகளூரு மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வாலிபர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார். மேலும் வீடுகள் இடிந்துள்ளன. பல கிராமங்களுக்கு போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.

சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறி உள்ளன. தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருமளவு தேங்கி உள்ளது. மேலும் ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வீடுகள் இடிந்துள்ளன. மண்சரிவு ஏற்பட்டு பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளதாலும், மழையால் டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்ததாலும் பல பகுதிகள் இருளில் மூழ்கி உள்ளன. தொடர் கனமழை காரணமாக சிக்கமகளூரு மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்து உள்ளது.

இப்படி இருக்க நேற்றும் சிக்கமகளூரு மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக சிருங்கேரி, மூடிகெரே, கொப்பா ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டியது. இதில் சிருங்கேரியில் மட்டும் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் சிருங்கேரி தாசில்தார், சிருங்கேரி தாலுகாவில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு நேற்று விடுமுறை அளித்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே நேற்று மதியம் சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா கொக்கரே கிராமத்தில் ஓடும் உழுவினகத்தே கால்வாயில் அதே பகுதியைச் சேர்ந்த அசோக்(வயது 25) என்ற வாலிபர் அடித்துச் செல்லப்பட்டார். உழுவினகத்தே கால்வாயில் கடந்த சில ஆண்டுகளாக நீர்வரத்து இருந்ததில்லை. சிக்கமகளூரு மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக உழுவினகத்தே கால்வாயில் நீர்வரத்து ஏற்பட்டது

இந்த நிலையில் நேற்று வாலிபர் அசோக், தனது மோட்டார் சைக்கிளில் கால்வாய் அருகே வந்துள்ளார். அப்போது கால்வாயின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலத்தை லேசாக மூழ்கடித்து வெள்ளம் சென்றுகொண்டிருந்தது. அதனால் எளிதாக மோட்டார் சைக்கிளில் கால்வாயை கடந்து விடலாம் என்று எண்ணிய அசோக், மோட்டார் சைக்கிளுடன் தரைப்பாலத்தில் சென்றார்.

அப்போது திடீரென கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. மேலும் தண்ணீரில் சிக்கி மோட்டார் சைக்கிளும் கால்வாயில் நடுவே தரைப்பாலத்தில் நின்றுவிட்டது. இதனால் செய்வதறியாது அதிர்ந்து போன அசோக், அங்கிருந்து தப்பி விடலாம் என்று நினைத்தார். ஆனால் அதற்குள் அவரை வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது. தற்போது அவரை தீயணைப்பு துறையினர், மீட்பு குழுவினர் ஆகியோர் தேடிவருகிறார்கள். இதுகுறித்து கொப்பா போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையே நேற்று சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் ஸ்ரீரங்கைய்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிக்கமகளூரு மாவட்டத்தில் சிருங்கேரி, மூடிகெரே, என்.ஆர்.புரா, கொப்பா உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால் அதிகப்படியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை சுமார் 15 வீடுகள் இடிந்துள்ளன. கடந்த வாரம் பெய்த மழையின்போது சிருங்கேரி பகுதியில் சுரேந்தர் என்பவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். பின்னர் அவர் பிணமாக மீட்கப்பட்டார்.

அவருடைய குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் சுரேஷ் என்பவரும் ஆற்றில் தவறி விழுந்து மாயமானார். இதுமட்டுமல்லாமல் வனஜா என்ற பெண் மாட்டு கொட்டகை இடிந்து விழுந்து பலியாகி உள்ளார்.

அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிவாரண நிதி வழங்கப்பட இருக்கிறது. மழையால் வீடுகள் சேதம் அடைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சேத மதிப்பை கணக்கிட்டு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.95 ஆயிரம் வரை நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. மழை பாதிப்பு குறித்து இன்னும் முழுமையாக ஆய்வு செய்யவில்லை.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆய்வு பணியை மேற்கொள்ள இயலவில்லை. மழை நின்றவுடன் மாவட்டம் முழுவதும் மழை பாதிப்புகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும். அப்போது பாதிப்புக்கு உள்ளான பொதுமக்கள், விவசாயிகள் என அனைவருக்கும் நிவாரண நிதி வழங்கப்படும்.

நிவாரண நிதி வழங்குவதற்காகவே ரூ.5 கோடி நிதியை ஒதுக்கி வைத்துள்ளோம். மேலும் ரூ.24 கோடி வழங்க மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். சிருங்கேரி தாலுகாவில் கஞ்சித்தொட்டி திறந்துள்ளோம். மேலும் பத்ரா ஆற்று கரையோரங்களில் உள்ளவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் பத்ரா ஆற்றின் கரையோரங்களில் அமைந்துள்ள பல கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

அதனால் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் உதவிகளை மீட்பு குழுவினர் செய்து வருகிறார்கள். மூடிகெரே தாலுகாவில் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலம் தாழ்வாக இருக்கிறது. அதனால் அங்கு வேறொரு புதிய பாலம் உயர்த்தி கட்டப்பட வேண்டும். இதுகுறித்தும் மாநில அரசிடம் தெரியப்படுத்தி இருக்கிறோம். மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story