கோவை கே.என்.ஜி.புதூர் பகுதியில் பள்ளி, கல்லூரி அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு


கோவை கே.என்.ஜி.புதூர் பகுதியில் பள்ளி, கல்லூரி அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு
x
தினத்தந்தி 12 July 2018 3:15 AM IST (Updated: 12 July 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

கோவை கே.என்.ஜி. புதூர் பகுதியில் பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனை இருப்பதால் அதன் அருகே மதுக்கடை திறக்க கூடாது என்று வற்புறுத்தி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

கோவை,

கோவை கே.என்ஜி.புதூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளானவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கோவை தடாகம் ரோட்டில் உள்ள கே.என்.ஜி.புதூர் பகுதியில் இந்திராநகர், அரவிந்தா நகர், ஷாலோம் காலனி உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. பெண்கள் விடுதியும் உள்ளது. ஏற்கனவே செயல்பட்டு வந்த மதுக்கடை பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாகவும், ஐகோர்ட்டு உத்தரவினாலும் மூடப்பட்டது.

இந்தநிலையில் மீண்டும் அதே பகுதியில் மதுக்கடையை திறப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. மதுபான பாட்டில்கள் அடங்கிய பெட்டிகள், தனியார் மருத்துவமனை அருகில் உள்ள ஒரு வீட்டில் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் அனைவரும் திரண்டு நின்று மதுக்கடையை திறக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தோம்.

இருந்தாலும் மதுக்கடையை திறப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பள்ளி, கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள் உள்ள பகுதியில் மீண்டும் மதுக்கடை திறக்கப்பட்டால் பொதுமக்கள், குறிப்பாக மாணவ,மாணவிகள், பெண்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படும். இப்போது திறக்கப்பட உள்ள மதுக்கடை பள்ளி, கல்லூரிகளுக்கு தொலைவில் இருப்பதாக தவறான தகவல் கொடுத்து அனுமதி பெற்றுள்ளனர். இந்த மதுக்கடையை திறக்காமல் நிரந்தரமாக மூடி பொதுமக்களின் பாதுகாப்புக்கும், அமைதிக்கும் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story