மாவட்ட செய்திகள்

வீடுகளை இடிக்கப்போவதாக அறிவிப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் 25 பேர் கைது + "||" + Announcement of demolition of houses: 25 arrested for women

வீடுகளை இடிக்கப்போவதாக அறிவிப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் 25 பேர் கைது

வீடுகளை இடிக்கப்போவதாக அறிவிப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் 25 பேர் கைது
வீடுகளை இடிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டதை கண்டித்து கும்பகோணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் 25 பேரை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தின்போது போலீசார்-பெண்கள் இடையே தள்ளு,முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம்,

கும்பகோணத்தில் குளக்கரை, வாய்க்கால் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி கும்பகோணம் ஓலைப்பட்டினம் வாய்க்கால் கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.


ஆக்கிரமிப்பாளர்களே தங்கள் வீடுகளை அகற்றி கொள்ளும் வகையில் அப்பகுதியில் குடியிருந்தவர்களுக்கு, கும்பகோணத்தை அடுத்த சேஷம்பாடி கிராமத்தில் இலவச வீட்டு மனை பட்டா வருவாய்த்துறை சார்பில் வழங்கப்பட்டது. இதற்கான விழா கடந்த 7-ந் தேதி கும்பகோணம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர் துரைக்கண்ணு கலந்துகொண்டு பட்டாக்களை வழங்கினார். பட்டா பெற்றவர்கள் 6 மாதத்துக்குள் வீடு கட்ட வேண்டும் என்றும், இல்லையெனில் பட்டா திரும்ப பெற்றுக்கொள்ளப்படும் என அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

பட்டாவுக்கான நிலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில், ஓலைப்பட்டினம் வாய்க்கால் கரையில் ஆக்கிரமித்து வீடு கட்டியவர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) இடத்தை காலி செய்ய வேண்டும், இல்லையெனில் அனைத்து வீடுகளும் இடித்து அப்புறப்படுத்தப்படும் என நகராட்சி நிர்வாகம் நேற்று அறிவித்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் நகராட்சியின் அறிவிப்பை கண்டித்து, தங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனை பட்டாக்களுடன் நேற்று கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவாத்தை நடத்திய தாசில்தார் வெங்கடாசலம், நகராட்சி ஆணையரை அழைத்து பேசுவதாகவும், அதுவரை வீடுகள் இடிக்கப்படாது என்றும் உறுதி அளித்தார்.

இதையடுத்து நகராட்சி ஆணையரிடம் முறையிட பெண்கள் சென்றனர். ஆனால் நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் இல்லாததால் ஆத்திரம் அடைந்த பெண்கள், நகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களை கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசமூர்த்தி, இன்ஸ்பெக்டர் மகாதேவன் ஆகியோர் கலைந்து செல்ல கூறியதால், பெண்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஆண் போலீசார், தங்களை தள்ளுவதாக பெண்கள் கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார், மறியலில் ஈடுபட்ட பெண்கள் 25 பேரை கைது செய்தனர். சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனிடையே ஓலைப்பட்டினம் வாய்க்கால் கரையில் வசித்து வருபவர்களில் சிலர், அன்பழகன் எம்.எல்.ஏ.விடம் பிரச்சினை குறித்து முறையிட்டனர்.

இதைத்தொடர்ந்து அவர், நகராட்சி ஆணையரை தொலைபேசியில் அழைத்து பேசி, பட்டா கொடுத்த இடத்தை அளந்து கொடுத்த பிறகே சம்பந்தப்பட்டவர்களின் வீட்டை இடிக்கும் பணியை தொடங்க வேண்டும் என கேட்டு கொண்டார். அதற்கு ஆணையர் உறுதி அளித்தார்.