மாவட்ட செய்திகள்

பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் திட்டம் இல்லை - சட்டசபையில் கோவிந்த் கார்ஜோள் + "||" + There is no plan for budget development for female children - Govind Garjal in the Assembly

பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் திட்டம் இல்லை - சட்டசபையில் கோவிந்த் கார்ஜோள்

பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் திட்டம் இல்லை - சட்டசபையில் கோவிந்த் கார்ஜோள்
ஏழை மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு கேள்விக்குறியாகி விட்டது, பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் திட்டம் இல்லை என்று சட்டசபையில் கோவிந்த் கார்ஜோள் கூறினார்.
பெங்களூரு,

கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 5-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரின் 8-வது நாள் கூட்டம் நேற்று காலை பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் கோவிந்த் கார்ஜோள் கலந்து கொண்டு பேசினார்.


அன்ன பாக்கிய திட்டத்தின் கீழ் முந்தைய காங்கிரஸ் அரசு, ஏழை மக்களுக்கு தலா 7 கிலோ அரிசி வழங்கியது. அதை இந்த அரசு தலா 5 கிலோவாக குறைத்துள்ளது. இதனால் ஏழை மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அன்ன பாக்கிய திட்டம் பற்றி சரியான புரிதல் இல்லாதவர்கள் தான் இத்தகைய முடிவை எடுப்பார்கள்.

ஒவ்வொருவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற இந்த திட்டத்தின் நோக்கத்தை இந்த கூட்டணி அரசு மறந்துவிட்டது. சமையல் கியாஸ் பாக்கிய திட்டத்தை முந்தைய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தில் பதிவு செய்தவர்களிடம் கட்டணமாக தலா ரூ.50 வசூலிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கவில்லை. ஏழை மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு கேள்விக்குறியாகி விட்டது.

அந்த மக்களை முந்தைய காங்கிரஸ் அரசு ஏமாற்றிவிட்டது. அந்த திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்துவதாக இருந்தால் உடனடியாக பணம் செலுத்திய மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் செலுத்திய கட்டணத்தை திரும்ப செலுத்திவிட்டு இந்த அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு கோவிந்த் கார்ஜோள் பேசினார்.

அப்போது பா.ஜனதா உறுப்பினர் ஈசுவரப்பா எழுந்து, “கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் சமையல் எரிவாயு பாக்கியம் மக்களுக்கு கிடைக்கவில்லை. கோடிக்கணக்கான ரூபாய் செலவில் சமையல் எரிவாயு பொருட்களை முந்தைய காங்கிரஸ் அரசு கொள்முதல் செய்தது. அது குடோனில் வைக்கப்பட்டுள்ளது. அவைகள் துருப்பிடித்து வருகின்றன. அதில் சித்தராமையாவின் உருவப்படம் உள்ளது. அதனால் அந்த எரிவாயு பொருட்களை மக்களுக்கு வழங்க இந்த கூட்டணி அரசு தயங்கி வருகிறது. சமையல் எரிவாயு பொருட்களை மக்களுக்கு வழங்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். மீண்டும் கோவிந்த் கார்ஜோள் பேசியதாவது:-

சந்தைக்கு புதிய வகை வாகனங்கள் வந்தால் பழைய வாகனங்கள், பழைய இரும்பு கடைக்கு சென்றுவிடுகின்றன. அதுபோல் புதிய அரசு ஆட்சிக்கு வந்துள்ளதால் முந்தைய காங்கிரஸ் அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் முடக்கி வைத்துள்ளனர். குப்பையை அகற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு குறித்த காலத்தில் இந்த அரசு சம்பளம் வழங்கவில்லை. இதனால் அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன. அவர்களுக்கு உணவு கொடுக்க முடியாத இந்த அரசு, என்ன ஆட்சி நிர்வாகத்தை நடத்துகிறது?.

கல்வி ஒன்றால் மட்டுமே ஆதிதிராவிட, பழங்குடியின மக்கள் முன்னேற்றம் அடைய முடியும். அந்த மக்களுக்கு 100 சதவீத கல்வியை வழங்கினால் கண்டிப்பாக அந்த சமுதாய மக்கள் முன்னேற்றம் அடைவார்கள். புற்றுநோய் மற்றும் இதயநோய் தொடர்பான மருத்துவமனைகளுக்கு மாநில அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்க வேண்டும்.

மாநிலத்தில் அங்கன்வாடி மையங்களுக்கு சொந்த கட்டிடம் இல்லை. பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை. இதுகுறித்து மாநில அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் 18 ஆயிரம் அரசு பள்ளிகளை மூடுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளை மூடும் பணியை செய்ய வேண்டாம். மாறாக அரசு பள்ளிகளை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வட கர்நாடகத்தில் அதிக எண்ணிக்கையில் அரசு பள்ளிகளை தொடங்க வேண்டும். இந்த அரசு 58 பி.யூ.கல்லூரிகளை மூடுவதாக கூறியுள்ளது. அந்த கல்லூரிகளை வட கர்நாடகத்தில் தொடங்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மொரார்ஜி தேசாய் உண்டு உறைவிட பள்ளிகளில் பி.யூ.கல்லூரியையும் தொடங்க வேண்டும். இவ்வாறு கோவிந்த் கார்ஜோள் பேசினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய நீர்ப்பாசனம் மற்றும் மருத்துவ கல்வித்துறை மந்திரி டி.கே.சிவக்குமார், “கோவிந்த் கார்ஜோள் உண்டு உறைவிட பள்ளிகள் குறித்து பேசி இருக்கிறார். இதுகுறித்து சமூக நலத்துறை மந்திரியுடன் ஆலோசனை நடத்துவேன். ‘நீட்‘ தேர்வு வந்த பிறகு மருத்துவ இடங்கள் ஒதுக்கீட்டில் உள்ளூர் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் மருத்துவ இடங்களில் 50 சதவீதத்தை உள்ளூர் மாணவர்களுக்கு ஒதுக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்” என்றார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை