மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனத்துக்கு ரூ.800 கோடி ஒதுக்கீடு + "||" + Rs 800 crore allocated for drip irrigation in the district

மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனத்துக்கு ரூ.800 கோடி ஒதுக்கீடு

மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனத்துக்கு ரூ.800 கோடி ஒதுக்கீடு
திண்டுக்கல் மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனத்துக்கு ரூ.800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.
பழனி,


பழனியை அடுத்த பாலசமுத்திரம் குரும்பபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் டி.ஜி. வினய் தலைமை தாங்கினார். சப்-கலெக்டர் அருண்ராஜ் முன்னிலை வகித்தார். தாசில்தார் சரவணக்குமார், தனிதாசில்தார் ராஜேந்திரன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட கலெக்டர் தலைமையுரையாற்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. அதே போல் கிராமப்புற மக்களும் அரசின் திட்டங்கள் மூலம் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே மக்கள் தொடர்பு முகாம் பாலசமுத்திரம் பகுதியில் தற்போது நடத்தப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் உழவன் கைபேசி செயலி என்ற இணையதள சேவையை பயன்படுத்தி பயிர் சாகுபடி குறித்த அனைத்து விவரங்களும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு சொட்டுநீர் பாசனத்துக்கு ரூ.400 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த நிதி தற்போது இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டுக்கான சொட்டுநீர் பாசன நிதியாக ரூ.800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல் பேரூராட்சி பகுதிகளில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பொதுமக்கள் வீடு கட்ட ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது.

இதுதவிர பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசின் நலத்திட்டங்களை பெற முடியாமல் தவிப்பவர்கள், புகார் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அவதிப்படுபவர்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக புகார் அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 7598866000 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணுக்கு பொதுமக்கள் தங்கள் புகார்களை அனுப்பினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். அதையடுத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 24 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 123 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, 14 பேருக்கு இலவச கியாஸ் அடுப்பு என மொத்தம் 297 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.