மாவட்டத்தில் நடப்பாண்டில் ரூ.3.28 கோடி மதிப்பில் குடிமராமத்து பணிகள் அமைச்சர் தகவல்


மாவட்டத்தில் நடப்பாண்டில் ரூ.3.28 கோடி மதிப்பில் குடிமராமத்து பணிகள் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 12 July 2018 4:00 AM IST (Updated: 12 July 2018 3:34 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டில் ரூ.3.28 கோடி மதிப்பில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பைசுஅள்ளி ஏரியில் குடிமராமத்து பணி தொடக்கவிழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை நீர்வளஆதாரஅமைப்பு செயற்பொறியாளர் மெய்யழகன் வரவேற்றார். விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு குடிமராமத்து பணிகளை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள ஏரிகள், குளங்களில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள கடந்த ஆண்டு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் தர்மபுரி மாவட்டத்தில் 21 ஏரிகளில் ரூ.1.58 கோடி மதிப்பில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நடப்பாண்டில் மாவட்டம் முழுவதும் உள்ள 10 ஏரிகளில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள ரூ.3.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பைசுஅள்ளி ஏரியில் குடிமராமத்து பணி மேற்கொள்ள ரூ.24 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று கிருஷ்ணாபுரம் பெரியஏரியில் ரூ.23 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலும், கிருஷ்ணாபுரம் சின்னஏரியில் ரூ.24 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலும், கோம்பைபள்ளம் ஏரியில் ரூ.22 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலும் நூலஅள்ளி ஏரியில் ரூ.23 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலும், குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதேபோல் ஜெர்தலாவ் ஏரியில் ரூ.40 லட்சம் மதிப்பிலும், தாமரை ஏரியில் ரூ.40 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலும், பாப்பாரப்பட்டி பெரியஏரியில் ரூ.23 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலும், மாதேமங்கலம் ஏரியில் ரூ.46 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலும், லளிகம் ஏரியில் ரூ.55 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலும் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் ரத்தினவேல், சாம்ராஜ், முன்னாள் நகராட்சி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் டி.ஆர்.அன்பழகன், தொ.மு.நாகராஜன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் மாணிக்கம், கோபால், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர்கள் செல்வராஜ், காவேரி, கவிதா, முன்னாள் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கே.வி.ரங்கநாதன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தர்மபுரி ஒன்றியம் நூலஅள்ளி ஏரியில் ரூ.23 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணி, எட்டிமரத்துப்பட்டியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி ஆகியவற்றை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார். இந்த பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

Next Story