திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை மின்சாரம் துண்டிப்பு


திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை மின்சாரம் துண்டிப்பு
x
தினத்தந்தி 12 July 2018 3:41 AM IST (Updated: 12 July 2018 3:41 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

ஊத்துக்கோட்டை,

பலத்த மழை

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மாலை 5 மணிக்கு தொடங்கிய மழை 6 மணி வரை நீடித்தது. பலத்த மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பலத்த காற்று காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பொதட்டூர்பேட்டை, அத்திமாஞ்சேரிப்பேட்டை, ஆர்.கே.பேட்டை போன்ற இடங்களில் மாலையில் ½ மணி நேரம் பலத்த மழை பெய்தது. பொன்னேரி, சோழவரம், மீஞ்சூர், பழவேற்காடு, மணலிபுதுநகர் போன்ற பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது.

கும்மிடிப்பூண்டி, எளாவூர், பள்ளிப்பட்டில் லேசான மழை பெய்தது. திருத்தணி, மத்தூர், கனகம்மாசத்திரம் பகுதிகளில் நேற்று மாலை ½ மணி நேரம் லேசான மழை பெய்தது. திருவள்ளூர், மணவாளநகர், புட்லூர், திருப்பாச்சூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம், மப்பேடு போன்ற பகுதிகளில் நேற்று மாலை ½ மணி நேரம் மழை பெய்தது.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ஒரகடம், வடக்குப்பட்டு, கரசங்கால், மலைப்பட்டு, மணிமங்கலம், ஒரத்தூர், காவனூர், வைப்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6 மணிக்கு திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த மழையால் அந்த பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் காற்றுடன் பெய்த மழையால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.

காஞ்சீபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சிறுகாவேரிப்பாக்கம், பாலுச்செட்டிசத்திரம், தாமல், கீழம்பி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில், ஆப்பூர், வண்டலூர், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி போன்ற இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. பலத்த காற்று காரணமாக அந்த பகுதியில் மின்வினியோகம் நிறுத்தப்பட்டது.

திருப்போரூர், கேளம்பாக்கம், முட்டுக்காடு, நாவலூர் பகுதிகளில் நேற்று மாலை ½ மணி நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மதுராந்தகம், கருங்குழி, முதுகரை, சித்தாமூர், மேல்மருவத்தூர் போன்ற பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. திருக்கழுக்குன்றம், கல்பாக்கம் பகுதிகளில் லேசான மழை பெய்தது.

Next Story