பாணாவரத்தில் வீட்டின் கதவை உடைக்க முயன்றபோது சிக்கி கொண்ட திருடன்
பாணாவரத்தில் வீட்டின் கதவை உடைக்க முயன்றபோது சிக்கிய திருடனை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பனப்பாக்கம்,
பாணாவரத்தில் உள்ள வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் கேசவன் (வயது 48), தையல் தொழிலாளி. அதே தெருவில் இவருக்கு சொந்தமான ஓட்டு வீடு உள்ளது. இங்கு இவரது தாயார் அமுதா (68) வசித்து வந்தார். மாடுகளை வளர்த்து வரும் அமுதா, வீட்டின் பின்புறம் மாடுகளை கட்டிவிட்டு அதே வீட்டில் தினமும் தூங்குவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 1 மணிக்கு அமுதா தூங்கிக் கொண்டிருந்தபோது சத்தம் கேட்டது. உடனே கண் விழித்த அவர் கதவு அருகே வந்து பார்த்தபோது 2 பேர் கதவை உடைத்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவர் ‘திருடன்’, ‘திருடன்’ என கூச்சலிட்டார். சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் மற்றும் கேசவன் ஆகியோர் விரைந்து வந்து பார்த்தபோது 2 மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் கதவை உடைத்துக் கொண்டு இருந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்ததும் 2 பேரில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
மற்றொருவர் தப்பி ஓடும்போது பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை மின்கம்பத்திலும் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். அந்த நபர் இந்தியில் பேசியதால் வடமாநில வாலிபராக இருக்கலாம் என்று கருதி அவரை பாணாவரம் போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் இந்தி பேச தெரிந்த ஒருவரை வரவழைத்து அந்த நபரிடம் விசாரித்தபோது, அவர் ராமலாத் சோரான் (33) என்பதும், நேபாள நாட்டை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இவர் மீது ஏற்கனவே, ஏதாவது வழக்குகள் உள்ளதா?, இவருடன் திருட வந்து தப்பி ஓடிய நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story