புதுவையில் போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த சந்துருஜி கைது
புதுவையில் பரபரப்பை ஏற்படுத்திய போலி ஏ.டி.எம். கார்டு மோசடி வழக்கில் முன்னாள் அ.தி.மு.க. பிரமுகர் சந்துருஜியை சி.ஐ.டி. போலீசார் அதிரடியாக கைது செய்தனர். போலீசில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவையில் ஏ.டி.எம். எந்திரங்களில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி வங்கி வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டு தகவல்களை திருடி அதைப்போல் போலியாக ஏ.டி.எம். கார்டுகளை உருவாக்கி அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணத்தை நூதன முறையில் திருடி ஒரு கும்பல் கோடிக்கணக்கில் மோசடி செய்தது. இதுகுறித்து பல்வேறு புகார்கள் போலீசாருக்கு வந்தது. இந்த பணம் மோசடி விவகாரம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி.சுந்தரி நந்தா உத்தரவின் பேரில் புதுவை சி.ஐ.டி. சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டு அப்துல்ரகீம் வழிகாட்டுதலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜிந்தா கோதண்டராமன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த வழக்கில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமின்றி தமிழக பகுதியை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த வழக்கில் டாக்டர், என்ஜினீயர், அரசியல் பிரமுகர்கள் என பலருக்கு தொடர்பு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்களுக்கு சர்வதேச கும்பலுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
அதையடுத்து இந்த வழக்கில் பாலாஜி, ஜெயச்சந்திரன் என்கிற சந்துரு, கமல், சரவணன் என்கிற ஷியாம், விவேக் ஆனந்த், கணேசன், சிவக்குமார், டேனியல் சுந்தர் சிங், அப்துல் சமத், சத்யா, மணிசந்தர், பீட்டர், தினேஷ், இர்பான் ரகுமான், சுதாகர் ஆகிய 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் முத்தியால்பேட்டை சோலை நகர் குறிஞ்சி வீதியை சேர்ந்த ராஜாங்கம் என்பவரின் மகனான முன்னாள் அ.தி.மு.க. பிரமுகர் சந்துருஜி (வயது 28) என்பவருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அவர் இந்த மோசடியில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டுள்ளார். அதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதுபற்றி அறிந்தவுடன் சந்துருஜி தலைமறைவானார்.
அதையடுத்து அவரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் புதுவை, தமிழ்நாடு, மும்பை, டெல்லி என பல்வேறு பகுதிகளுக்கு விரைந்தது. தலைமறைவானவர் நாள்தோறும் தான் பதுங்கி இருந்த இடத்தை மாற்றிய காரணத்தால் போலீசாரால் சந்துருஜியை கைது செய்ய முடியவில்லை. அதேபோல் அவர் 100-க்கும் மேற்பட்ட ‘சிம்’ கார்டுகளை பயன்படுத்தியதால் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு பெரும் சவாலாக அமைந்தது.
இந்த நிலையில் சந்துருஜியின் தம்பியான மணிசந்தர் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டும், போலீசாருக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த வழக்கில் சந்துருஜி 2 மாதங்களுக்கு மேலாக போலீசாரிடம் சிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தலைமறைவான சந்துருஜி, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவரை பிடிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தனர்.
இந்தநிலையில் புதுவை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் சந்துருஜியை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கக்கோரி போலீசார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே சென்னைக்கு சந்துருஜி வருவதாக சி.ஐ.டி. போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து சி.ஐ.டி. சப்-இன்ஸ்பெக்டர் விஜயக்குமார், ஏட்டு பெரியண்ணசாமி, காவலர் மணிமொழி ஆகியோர் கடந்த சில நாட்களாக அங்கு முகாமிட்டு இருந்தனர். இந்தநிலையில் சென்னையில் சந்துருஜியை நேற்று சி.ஐ.டி. போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை புதுவைக்கு அழைத்து வந்தனர்.
அதைத்தொடர்ந்து போலீசில் சந்துருஜி அளித்த வாக்குமூலத்தில், ‘தனது பெயரில் ஸ்வைப்பிங் எந்திரங்கள் வாங்கினேன். அந்த எந்திரங்களை எனது கூட்டாளிகளிடம் வழங்கினேன். அதேபோல் ஏ.டி.எம். கார்டு, கடன் அட்டைகள் ஆகியவற்றையும் போலியாக தயாரித்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தேன். அந்த பணத்தின் மூலமாக அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கினேன்’ என வாக்குமூலம் அளித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்துருஜியை சி.ஐ.டி. போலீசார் இன்று (வியாழக்கிழமை) புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். அதன்பின்னர் சந்துருஜியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த விசாரணையின்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.
இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட சி.ஐ.டி. போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் பாராட்டினார்.
Related Tags :
Next Story