மின்கட்டண உயர்வை கண்டித்து ஸ்மார்ட் மீட்டர்களை உடைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்
மின்கட்டணம் 2 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து சட்டசபை வளாகத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஸ்மார்ட் மீட்டர்களை உடைத்து போராட்டம் நடத்தினர். அப்போது இதில் பலகோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி,
புதுவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வம்பாகீரப்பாளையம் மற்றும் ராஜ்பவன் தொகுதியில் சில இடங்களில் பழைய மின்மீட்டர்களை மாற்றி விட்டு சீனாவில் இருந்து இறங்குமதி செய்யப்பட்ட ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டது. இந்த மீட்டர் பொருத்தப்பட்ட வீடுகளில் மின்கட்டணம் 2 மடங்காக உயர்ந்துள்ளதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் சட்டசபையில் வலியுறுத்தப்பட்டது. இந்த மீட்டர்களை திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. வலியுறுத்தி வந்தது. இந்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், அசனா, வையாபுரி மணிகண்டன் ஆகியோர் நேற்று காலை மின் மீட்டர்களின் மாதிரிகளை சட்டசபைக்கு எடுத்து வந்தனர். அவர்கள் சட்டசபை வாசலில் அதனை உடைத்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மின்கட்டண உயர்வுக்கு காரணமாக உள்ள ஸ்மார்ட் மீட்டர்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் சட்டசபையின் உள்ளே சென்றனர்.
இது குறித்து அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரி அரசு, சீன நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 34 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டரை ஏழை எளிய மக்கள் வீடுகளில் பொருத்தியுள்ளனர். இந்த மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு மின் உபயோக ரீடிங் மிக அதிகமாக காட்டுகிறது. புதிய ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுவதற்கு முன் ரூ.750 மின்கட்டணம் கட்டியவர்கள் தற்போது ரூ.1500 ரூபாயும், ஏற்கனவே ரூ.1500 கட்டியவர்கள் தற்போது ரூ.2,750 ரூபாயும், ரூ.3 ஆயிரம் கட்டியவர்கள் தற்போது ரூ.5 ஆயிரத்திற்கு மேல் கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் புதுவை மாநிலத்தில் ரூ.1200க்கு வாங்கப்படும் பழைய மீட்டரை நீக்கி விட்டு, ஒரு மீட்டருக்கு ரூ.14ஆயிரம் கொடுத்து 34 ஆயிரம் மீட்டர்கள் வாங்க வேண்டிய அவசியம் என்ன? சீன நாட்டில் இருந்து மின் மீட்டர் வாங்க மத்திய அரசு புதுச்சேரிக்கு அனுமதி வழங்கி உள்ளதா? இதற்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்தாரா? இதில் மிகப் பெரிய ஊழல் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணைக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவிட வேண்டும்.
இந்த மின் மீட்டருக்கான செலவு முழுவதும் யார் ஏற்க போகிறீர்கள். மின் நுகர்வோரான மக்கள் மீது தான் இந்த செலவு திணிக்கப்படும். ஏற்கனவே மின் கட்டணத்தோடு, கூடுதல் மின் கட்டணம், அபராத வட்டி, சர்வீஸ் சார்ஜ் என பல தலைப்புகளில் கட்டணங்களை வசூல் செய்யும் மின் துறை இனி வரும் காலங்களில் ஸ்மார்ட் மீட்டருக்கும் ஒரு கட்டணத்தை வசூல் செய்யும். புதுவை மாநிலத்தில் மொத்தம் 3 லட்சத்து 40 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ள நிலையில் 34 ஆயிரம் வீடுகளுக்கு மட்டும் புதிய மீட்டர் மாற்ற வேண்டிய அவசியம் என்ன?. இதனால் பலகோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.
எனவே வீடுகளில் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் மீட்டரை அகற்றவும், உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை சட்டமன்றத்தில் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தும், இந்த அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மக்கள் பயன்பாட்டிற்கு உதவாத, அதிக ரீடிங் காட்டும் சீன மின் மீட்டர்களை உடைக்கும் போராட்டத்தை நடத்தினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story