மாநகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை
திண்டுக்கல்லில் சாலையோர கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் நகரில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலையோர கடைகள் உள்ளன. இதில் காந்தி மார்க்கெட் பகுதியும் ஒன்றாகும். இந்த மார்க்கெட்டுக்கு வெளியே காய்கறிகள், பழங்கள் என 110 சாலையோர கடைகள் உள்ளன. இதில் ஒருசிலர் 10 அடி தூரம் வரை கடைகளை அமைத்துள்ளனர்.
இதனால் காந்தி மார்க்கெட் சாலையில் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது அகற்றுவார்கள். எனினும், ஒருசில மணி நேரத்தில் வியாபாரிகள் மீண்டும் கடைகளை அமைத்து விடுவார்கள். இதனால் சாலையோர கடைகளின் ஆக்கிரமிப்பை தடுக்க முடியவில்லை.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காந்தி மார்க்கெட் பகுதியை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். அப்போது சிலர் சாலையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து இருந்தனர். இதையடுத்து காந்தி மார்க்கெட்டுக்கு வெளியே இருக்கும் அனைத்து சாலையோர கடைகளையும் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு சென்றனர்.
இதனால் வியாபாரிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். மேலும் சாலையோர கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, நேற்று திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்துக்கு வியாபாரிகள் திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அங்கு கமிஷனர் இல்லை. எனவே, மாநகராட்சி வருவாய் அதிகாரி சரவணன், சாலையோர வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது சாலையோர கடைகளை அகற்றினால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, சாலையோர கடைகளை அகற்ற வேண்டாம் என்று வியாபாரிகள் கூறினர். அதேநேரம் சாலையோர கடைகளை அகற்றி விட்டு, காந்தி மார்க்கெட் உள்ளே வியாபாரிகளுக்கு இடம் தருவதாக வருவாய் அதிகாரி தெரிவித்தார். மேலும் இதுபற்றி கமிஷனரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன்பேரில் வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story