மாவட்ட செய்திகள்

மழை நீருக்கும் வரி! + "||" + Rain water tax

மழை நீருக்கும் வரி!

மழை நீருக்கும் வரி!
ரஷிய நகரம் ஒன்றில் மழைநீருக்கும் வரி விதிக்கப்பட்டிருப்பது குடியிருப்புவாசிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ரஷியாவின் பெர்ம் நகரில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு மின்சாரம், குடிநீர் போன்ற மாதாந்திர பயன்பாட்டுக் கட்டணத்தை மொத்தமாக வசூலிக்கும் முறை அமலில் உள்ளது.

இந்நிலையில் கடந்த மே மாதம் முதல், கழிவுநீர்க் கட்டணம் என்ற பெயரில் புதிய கட்டணம் ஒன்று மாதாந்திரக் கட்டணத்தில் சேர்க்கப்பட்டிருந்ததைக் கண்ட அக்குடியிருப்புவாசிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேள்வி எழுப்பியபோது, ‘இது மழைக்காலம் என்பதால் மொட்டை மாடியிலிருந்து வழிந்தோடி கழிவுநீர்த் தொட்டியில் மழைநீர் கலந்ததால் அதற்குரிய கட்டணம் மழை வரியாக விதிக்கப்பட்டுள்ளது’ எனத் தகவல் கொடுத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள், மழைநீருக்கும் வரியா என்று ஆதங்கம் அடைந்தனர். ஒவ்வொரு வீட்டில் இருந்தும் சேகரிக்கப்படும் கழிவுநீர், பைப்புகள் மூலம் கழிவுநீர் வடிகால் வழியாகச் செல்வதை நாம் அறிவோம். ஆனால் மொட்டை மாடியில் சேகரிக்கப்படும் மழைநீர், தனியாக பைப்புகள் மூலமாக பூமிக்குள் செலுத்தப்படுவதாகவே தெரிகிறது.

இது தொடர்பாக மாதாந்திர பயன்பாட்டுக் கட்டணம் வசூல் செய்யும் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டபோது, அது முற்றிலும் சட்டப்பூர்வமாகவே வசூலிக்கப்படுகிறது என்றும், கழிவுநீர் வடிகாலில் செல்லும் கழிவுநீர், மழைநீர் ஆகிய இரண்டும் சமமாகவே கருதப்படும் என்றும் கூறியுள்ளனர்.

வேறுவழியின்றி இதை ஏற்றுக்கொண்ட குடியிருப்புவாசிகள், இது மழைக்காலத்துக்கு மட்டும் வசூலிக்கப்படுமா அல்லது வருடம் முழுவதும் வசூல் செய்யப்படுமா என்று மேலும் குழப்பமடைந்துள்ளனர்.

மழைநீருக்காக வரி வசூல் செய்யப்படுவது நகரவாசிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.