நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் விழா உயர் கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் விழா  உயர் கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது
x
தினத்தந்தி 13 July 2018 3:30 AM IST (Updated: 12 July 2018 6:43 PM IST)
t-max-icont-min-icon

உயர் கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது என நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

நெல்லை, 

உயர் கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது என நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

பல்கலைக்கழக நுழைவு வாயிலில் தேசிய கொடி

நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் நுழைவு வாயிலில் 100 அடி உயரத்தில் எந்திரத்துடன் கூடிய தேசிய கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. ரூ.1 கோடி செலவில் பல்கலைக்கழக சுற்று சுவர் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.56 லட்சம் செலவில் மின்தூக்கி வசதியுடன் நிர்வாக கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

இதன் திறப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா முன்னிலை வகித்தார். தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, புதிய கம்பத்தில் தேசிய கொடியேற்றினார். அதற்கான கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட நிர்வாக கட்டிடத்தை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:–

ரூ.20 கோடி நிதி

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா உயர்கல்விக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அவர் வழியில் வந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு உயர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிதியின் மூலம் பல்கலைக்கழகங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கணினி ஆராய்ச்சி மையம், சூரியமின் உற்பத்தி மையம், புல்வெளி பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

தேசிய மதிப்பீடு குழு

வருகிற 19–ந் தேதி (வியாழக்கிழமை) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று ஆணைய குழு (நாக் கமிட்டி) வர உள்ளது. அந்த குழு 3 நாட்கள் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்கிறது. கடந்த முறை இந்த குழு ஆய்வு செய்து ‘பி‘ அந்தஸ்து வழங்கியது. தேசிய மதிப்படு குழு ஆய்வு முடிந்தவுடன் ‘ஏ.பிளஸ்‘ அந்தஸ்து கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

என்ஜினீயரிங் கல்லூரியை பொறுத்த வரையில் தமிழகத்தில் அரசு கல்லூரிகள் உள்பட 509 கல்லூரிகள் உள்ளன. இதில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 139 இடங்கள் உள்ளன. இது தவிர சுயநிதி கல்லூரிகளில் 18 ஆயிரத்து 500 இடங்கள் உள்ளன.

மாணவர் சேர்க்கை

மாணவர் சேர்க்கைக்காக கவுன்சிலிங்குக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. இதில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 453 விண்ணப்பங்கள் தகுதியானவை ஆகும். அந்த மாணவர்களுக்கு என்ஜினீயரிங் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் சுயநிதி பல்கலைக்கழக நிர்வாக பிரிவில் சேரும் மாணவர்களுக்கு அரசு நிர்ணயம் செய்யும் கட்டணங்களை வசூல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அனைத்து மாணவர்களும் விரும்பும் பாடங்களை படிக்க வேண்டும் என அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி 264 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

தமிழகம் முதலிடம்

வருகிற 2020–ம் ஆண்டுக்குள் 30 சதவீதம் மாணவர்களுக்கு உயர் கல்வி வழங்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் தற்போது தமிழகத்தில் உயர் கல்வி 46.9 சதவீதமாக உள்ளது. மத்திய அரசு நிர்ணயித்த இலக்கை விட தமிழகத்தில் கல்வி தரம் உயர்ந்து விட்டது. இந்தியாவிலேயே உயர் கல்வியில் தமிழகம் முதல் இடம் வகிக்கிறது.

பேராசிரியர் நியமனத்தில் ஊழல் நடந்து வருவதாக தவறான தகவல்களை சிலர் பரப்பி வருகிறார்கள். இது முற்றிலும் தவறு. வேலையில்லாத பேராசிரியர் சிலர் தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். இதை யாரும் நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

எம்.பி.க்கள்– எம்.எல்.ஏ.க்கள்

விழாவில் எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், கே.ஆர்.பி. பிரபாகரன், வசந்திமுருகேசன், விஜிலா சத்யானந்த், விஜயகுமார், எம்.எல்.ஏ.க்கள் இன்பதுரை, செல்வமோகன்தாஸ் பாண்டியன், மனோகரன், பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு, அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், நெல்லை மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், பொருளாளர் கணேசராஜா, நெல்லை புறநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் காபிரியேல் ஜெபராஜன், இளைஞர் பாசறை முன்னாள் செயலாளர் அரிகர சிவசங்கர், அ.தி.மு.க. முன்னாள் அமைப்பு செயலாளர் நாராயண பெருமாள், புதுக்குளம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் முத்துக்குட்டி பாண்டியன், பேராசிரியர்கள் மற்றும் மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story