பாகனை கொன்ற கோவில் யானை மசினிக்கு உடல்நலக்குறைவு டாக்டர்கள் தீவிர சிகிச்சை
பாகனை கொன்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை மசினிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து யானைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சமயபுரம்,
சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலுக்கு மறைந்த முதல்– அமைச்சர் ஜெயலலிதா மசினி என்ற யானைக்குட்டியை வழங்கினார். இதைத்தொடர்ந்து விசேஷ காலங்களிலும், தினசரி அம்மனுக்கு பூஜை நடக்கும் காலை நேரத்திலும் கோவிலுக்கு, யானை மசினி அழைத்து வரப்படும். அங்கு பக்தர்களுக்கு ஆசி வழங்கும். பின்னர் கோவில் அருகே கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருக்கும்.
இந்நிலையில் கோவிலில் கடந்த மே மாதம் 25–ந் தேதி திடீரென்று யானை மசினி, பாகன் கஜேந்திரனை காலால் மிதித்து கொன்றது. பாகன் நடவடிக்கையால் கோபமடைந்த யானை அவரை கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து திருவானைக்காவல், ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை உள்ளிட்ட கோவில் யானைகளின் பாகன்கள் மற்றும் உள்ளுரில் இருக்கும் அனுபவமுள்ள தனியார் யானை பாகன்கள் வரவழைக்கப்பட்டு, மசினி யானையிடம் அதன் பாஷையில் பேசி சமாதானப்படுத்தப்பட்டது. பின்னர் கோவிலில் இருந்து யானை மசினி வெளியே கொண்டு வரப்பட்டு சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் மாகாளிகுடியில் உள்ள உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில் வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக யானை மசினி உணவு எதுவும் உட்கொள்ளாமல் மிகவும் சோர்வாக காணப்பட்டது. தொடர்ந்து வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த கோவில் இணை ஆணையர் குமரதுரை, மேலாளர் ஹரிஹரசுப்பிரமணியன் ஆகியோர் யானைக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து தேனியில் இருந்து வரவழைக்கப்பட்ட கால்நடை டாக்டர்கள் கலைவாணன், முத்துராமலிங்கம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலைய டாக்டர் வீரச்செல்வன் தலைமையிலான மருத்துவ குழுவினர் யானை மசினியை பரிசோதனை செய்தனர்.
பரிசோதனையில் யானை மசினிக்கு வயிற்றில் சிறிய அளவிலான கட்டி இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து யானை மசினிக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து யானையின் உடல் நலத்தையும், நடவடிக்கைகளையும் மருத்துவ குழுவினர் மற்றும் மாவட்ட வன அலுவலர் சுஜாதா, வனச்சரகர் பாலகிருஷ்ணன் ஆகியோரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து கோவில் இணை ஆணையர் குமரதுரை கூறுகையில், யானையின் காலில் ஏற்பட்ட புண்ணின் காரணமாக நீர்கோர்த்தல் ஏற்பட்டு, அதன் காரணமாக கட்டி ஏற்பட்டதாக டாக்டர் குழுவினர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு கொண்டு சென்று மேல்சிகிச்சை அளிக்கப்படுமா? அல்லது வேறு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது குறித்து துறை உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும், என்றார்.