மணப்பாறை அருகே இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
மணப்பாறை அருகே இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மணப்பாறை,
மணப்பாறையை அடுத்த கே.உடையாபட்டியை சேர்ந்தவர் சண்முகசெல்வம்(வயது 28). லாரி உரிமையாளரான இவர் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வந்தார். இந்த காளை திருச்சி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வீரர்களிடம் பிடிபடாமல், உரிமையாளருக்கு பல்வேறு பரிசுகளை பெற்றுத் தந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த காளைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், சண்முகசெல்வம் மற்றும் காளையை பராமரித்த சுப்ரமணி ஆகிய இருவரும், கால்நடை டாக்டர்களை வரவழைத்து காளைக்கு சிகிச்சை அளித்தனர்.
இருப்பினும் காளையின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகிக் கொண்டே இருந்ததால் டாக்டர்கள் அறிவுரைப்படி நேற்று நாமக்கல் கால்நடை மருத்துவமனைக்கு காளையை வேனில் கொண்டு சென்றனர். அங்கு, காளை இறுதி கட்டத்தில் உள்ளதாக கூறப்பட்டதை அடுத்து சண்முகசெல்வம் தனது காளையை மீண்டும் வீட்டிற்கு கொண்டு சென்றார். ஆனால், வீட்டிற்கு வரும் வழியிலேயே காளை பரிதாபமாக உயிரிழந்தது.
பின்னர், அந்த காளையின் உடல் இறுதி அஞ்சலிக்காக தோட்டத்தில் வைக்கப்பட்டது. கிராம மக்கள் காளையின் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஜல்லிக்கட்டு காளையை தோட்டத்தின் ஒரு பகுதியில் அடக்கம் செய்தனர். காளை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் விரைவில் சிலை எழுப்பி வழிபாடு நடத்துவேன் என்று சண்முகசெல்வம் தெரிவித்தார்.