மாவட்ட செய்திகள்

பிசியோதெரபிஸ்ட்டை கொலை செய்த கல்லூரி மாணவி உள்பட 4 பேர் கைது + "||" + Four arrested, including a college student who killed the physiotherapist

பிசியோதெரபிஸ்ட்டை கொலை செய்த கல்லூரி மாணவி உள்பட 4 பேர் கைது

பிசியோதெரபிஸ்ட்டை கொலை செய்த கல்லூரி மாணவி உள்பட 4 பேர் கைது
பிசியோதெரபிஸ்ட்டை கொலை செய்த கல்லூரி மாணவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஆபாச வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டியதால் தீர்த்துக் கட்டியதாக மாணவி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
திருச்சி,

அரியலூர் மாவட்டம் செந்துறை பொன்பரப்பியை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 36). இவர் சென்னையில் பிசியோதெரபிஸ்ட்டாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி கர்ப்பகாம்பிகா. இவர் ஈரோட்டில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 8-ந் தேதி விஜயகுமார் சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் பொன்பரப்பிக்கு வந்தார். அங்கு மனைவியிடம் ஒரு சிறிய வேலை இருப்பதாகவும், முடித்துவிட்டு வந்துவிடுவதாகவும் கூறி வெளியே சென்றார். அதன்பிறகு அவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, அந்த போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அவரை பல்வேறு இடங்களிலும் உறவினர்கள் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால் இது குறித்து கர்ப்பகாம்பிகா செந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் செந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, மாயமான விஜயகுமாரை தேடி வந்தனர்.


இந்தநிலையில் திருச்சி திருவானைக்காவலை அடுத்த திருவளர்ச்சோலை அருகே காவிரி ஆற்று கரையோரம் வாலிபர் ஒருவர் கத்தி குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது பற்றி அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். ஆனால் கொலை செய்யப்பட்டவரின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது உடனடியாக தெரியவில்லை. இதனால் கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் புகைப்படம் மற்றும் அவர் அணிந்து இருந்த உடைகள் உள்ளிட்ட தகவல்களை வாட்ஸ்-அப் மூலம் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர்.

அப்போது அரியலூரை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் விஜயகுமார் கடந்த 8-ந் தேதி மாயமான தகவல் ஸ்ரீரங்கம் போலீசாருக்கு கிடைத்தது. உடனே விஜயகுமாரின் உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்து ஸ்ரீரங்கம் வரவழைத்தனர். அங்கு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் இருந்த உடலை பார்த்து அது விஜயகுமார் தான் என உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து உஷார் அடைந்த போலீசார் விஜயகுமார் பயன்படுத்திய செல்போன் எண்களை வைத்து அவர் யார்? யாரிடம் பேசினார் என்ற தகவல்களை திரட்டினர். அப்போது குறிப்பிட்ட எண்ணில் ஒரு பெண்ணுடன் அவர் அடிக்கடி பேசி இருந்தது தெரியவந்தது.

கடைசியாக கடந்த 8-ந் தேதி பகலில் அதே பெண்ணுடன் விஜயகுமார் போனில் பேசி உள்ளார். அதன்பிறகு சிறிதுநேரத்தில் அவருடைய போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் போலீசார் அந்த எண் யாருடையது என விசாரித்தனர். விசாரணையில் அந்த எண் திருச்சி உறையூரை சேர்ந்த ஈஸ்வரி(வயது 21) என்ற மாணவி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், ஈஸ்வரி சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு விடுதியில் தங்கியிருந்து பகுதிநேரமாக ஒரு அலுவலகத்தில் மாதம் ரூ.7,500 சம்பளத்தில் கணக்காளராக பணியாற்றி கொண்டு, சி.ஏ. படித்து வருவது தெரியவந்தது. இவர் தினமும் நுங்கம்பாக்கத்தில் இருந்து எழும்பூரில் உள்ள அலுவலகத்துக்கு மின்சார ரெயிலில் சென்று வந்தார்.

அப்போது நுங்கம்பாக்கத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட்டாக வேலை பார்த்து வந்த விஜயகுமாருக்கும், ஈஸ்வரிக்கும் கடந்த ஓராண்டாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தியது. வடபழனியில் தங்கி இருந்த விஜயகுமார் ஒருநாள் ஈஸ்வரியை தனது அறைக்கு அழைத்து சென்று அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் அவர்களது உறவு அடிக்கடி தொடர்ந்து வந்துள்ளது. அந்தசமயம் விஜயகுமார், ஈஸ்வரியை ஆபாசமாக செல்போனில் படம் எடுத்து வைத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அந்த வீடியோவை வைத்து மிரட்டி அடிக்கடி அவர் ஈஸ்வரியிடம் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர், ஈஸ்வரியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார்.

ஆனால் அவரோ படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இதனை ஏற்காத விஜயகுமார் தொடர்ச்சியாக ஈஸ்வரியிடம் திருமணத்துக்கு வற்புறுத்தி வந்தார். ஆனாலும் ஈஸ்வரி மறுத்து வரவே, திருமணம் செய்து கொள்ளாவிட்டால் ஆபாச வீடியோக்களை வெளியிடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதனால் பயந்துபோன ஈஸ்வரி விஜயகுமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். கடந்த 7-ந் தேதி இரவு ஈஸ்வரியும், விஜயகுமாரும் சென்னையில் இருந்து மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சி வந்தனர். திருச்சி வந்தவுடன் விஜயகுமார் பஸ்சில் அரியலூருக்கு புறப்பட்டு சென்றார். ஈஸ்வரி வீட்டுக்கு செல்லாமல் சத்திரம் பஸ் நிலையம் சென்று அங்கு அமர்ந்து என்ன செய்வது என்று யோசித்தார்.

அங்கு திருச்சி இ.பி.ரோட்டை சேர்ந்த மாரிமுத்து(33) சத்திரம் பஸ் நிலையத்தில் குடிபோதையில் தள்ளாடியபடி அனைவரையும் மிரட்டி கொண்டு இருந்தார். இதனை கண்ட ஈஸ்வரி மாரிமுத்துவிடம் உதவி கேட்க முடிவு செய்தார். அவரிடம் சென்று தன்னை ஒருவன் கெடுத்து விட்டதாகவும், அவனை கொலை செய்ய வேண்டும் என்றும் கண்ணீர் விட்டு அழுதார். ஈஸ்வரி கூறியதை கேட்டு போதையில் இருந்த மாரிமுத்து கொலை செய்ய சம்மதித்தார். இதற்காக மாரிமுத்து ரூ.1 லட்சம் கேட்டார். ஆனால் ஈஸ்வரி தான் வேலை செய்து சேமித்து வைத்து இருந்த பணத்தில் ரூ.55 ஆயிரத்தை தருவதாக ஒப்பு கொண்டார்.

இதையடுத்து மாரிமுத்து தனது கூட்டாளிகளான சத்திரம் பஸ்நிலையம் வெனீஸ்தெருவை சேர்ந்த குமார்(25), சிந்தாமணி பூசாரிதெருவை சேர்ந்த கணேசன்(23) ஆகியோருடன் ஈஸ்வரியையும் சேர்த்து கொண்டு திட்டமிட்டனர். இவர்கள் நான்குபேரும் விஜயகுமாரை கொலை செய்ய வேண்டிய இடத்தை முன்கூட்டியே தேர்வு செய்து அங்கு நேரில் சென்று பார்த்தனர். அதன்படி ஈஸ்வரியிடம், விஜயகுமாருக்கு போன் செய்து அங்கு வரவழைக்கும்படி கூறினர். இதையடுத்து ஈஸ்வரியும் விஜயகுமாருக்கு போன் செய்து திருமணம் தொடர்பாக முக்கிய விஷயம் பேச வேண்டும் என்றும், திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருப்பதாகவும் கூறி உள்ளார்.

உடனே விஜயகுமார் அரியலூரில் இருந்து பஸ் ஏறி சத்திரம் பஸ் நிலையம் வந்தார். அங்கு தயாராக இருந்த ஈஸ்வரி, விஜயகுமாரை அழைத்து கொண்டு ஆட்டோவில் திருச்சி-கல்லணைரோட்டில் திருவளர்ச்சோலை பகுதியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று இறங்கினார். அங்கு சென்றதும் காவிரி கரையோரம் விஜயகுமாரை அழைத்து சென்றார். அப்போது அங்கு ஏற்கனவே கத்தியுடன் புதரில் பதுங்கி இருந்த மாரிமுத்து, கணேசன், குமார் ஆகியோர் பாய்ந்து சென்று விஜயகுமாரை சரமாரியாக குத்தி படுகொலை செய்தனர். பின்னர் விஜயகுமாரின் உடலை அங்கு வீசிவிட்டு 4 பேரும் காவிரி ஆற்றுக்குள் சிறிதுதூரம் நடந்து சென்று கரையேறி சென்று விட்டனர்.

செல்போன் மூலம் இந்த கொலை வழக்கில் துப்பு துலங்கியதை தொடர்ந்து மாணவி ஈஸ்வரி, மாரிமுத்து, கணேசன், குமார் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? எனவும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

விசாரணையில் ஈஸ்வரி போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில், “நான் சென்னையில் சி.ஏ. படித்து வந்தேன். அப்போது ஓராண்டுக்கு முன்பு விஜயகுமாருடன் பழக்கம் ஏற்பட்டது. என்னிடம் நெருங்கி பழகிய அவர் என்னிடம் உல்லாசம் அனுபவித்தார். அதனை செல்போனில் படம் எடுத்து வைத்து கொண்டு அடிக்கடி மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்தார். மேலும், அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று என்னை வற்புறுத்தி வந்தார். ஒரு கட்டத்தில் ஆபாச வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டியதால் பயந்து போன நான் ஆட்களை வைத்து கொலை செய்தேன்“ என்று கூறினார். 

ஆசிரியரின் தேர்வுகள்...