கொள்ளிடக்கரையில் ஸ்ரீரங்கம் நாராயண ஜீயர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது


கொள்ளிடக்கரையில் ஸ்ரீரங்கம் நாராயண ஜீயர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
x
தினத்தந்தி 12 July 2018 11:00 PM GMT (Updated: 12 July 2018 6:58 PM GMT)

ஸ்ரீரங்கம் நாராயண ஜீயர் உடல் நல்லடக்கம் கொள்ளிடக்கரையில் நேற்று நடந்தது. இறுதி சடங்கில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் வடக்கு உத்தரவீதியில் உள்ள ராமானுஜர் மடத்தின் 50-வது பட்டம் ஜீயர் ஸ்ரீரெங்க நாராயண ஜீயர். 1989-ம் ஆண்டு பட்டத்துக்கு வந்த இவர் ஸ்ரீரங்கம் மடத்தில் தங்கியிருந்து ராமானுஜரின் சித்தாந்தத்தை பரப்பி வந்ததுடன், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஆகம ஆலோசகராகவும் இருந்து வந்தார். இருதய கோளாறு மற்றும் சிறுநீரக பிரச்சினை காரணமாக சிறிது காலம் உடல் நலம் குன்றியிருந்த ஸ்ரீரெங்கநாராயண ஜீயர் தனது 89-வது வயதில் நேற்று முன்தினம் மதியம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.

அங்கிருந்து அவரது உடல் ஸ்ரீரங்கம் வடக்கு உத்தரவீதியில் உள்ள மடத்துக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. சீடர்கள் மற்றும் ஏராளமான உள்ளூர் பக்தர்கள் ஜீயரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். நேற்று காலை ஜீயரின் உடலுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர், மன்னார்குடி, திருக்குறுங்குடி, பவுண்டரீகபுரம் ஆஸ்ரமம், கோவை ஜீயர்கள், அமைச்சர்கள் வெல்ல மண்டி நடராஜன், வளர்மதி, முன்னாள் அமைச்சர் கே.கே. பாலசுப்பிரமணியன், பாரதீய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்ட பிரமுகர்களும், கே.ஏ.எஸ். ராம்தாஸ், மங்கள் அண்ட் மங்கள் மூக்கப்பிள்ளை உள்பட தொழில் அதிபர்கள் மற்றும் திரளான பக்தர்களும் ஜீயரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பகல் 12 மணியளவில் ஜீயரின் இறுதிச் சடங்கு நிகழச்சிகள் தொடங்கின. முதலாவதாக ஜீயரின் மறைவை தெரிவிக்கும் சம்பிரதாய சடங்காக பிரம்ம ரதம் எனப்படும் பல்லக்கு ஸ்ரீரங்கம் உத்தரவீதிகளில் வலம் வந்து மடத்தை அடைந்தது. இதனை தொடர்ந்து ஜீயரின் உடலுக்கு பக்தர்கள், பொதுமக்கள் முன்னிலையில் பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பூஜா திரவியங்களை கொண்டு திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின்னர் ஜீயரின் பூர்வாஸ்ரம மகன்கள் நாராயணன், திருமலை ஆகியோர் முன்னிலையில் புரோகிதர்கள் உதவியுடன் ஜீயருக்கு இறுதிச்சடங்குகளை செய்தனர். திருப்பதி உள்பட முக்கிய வைணவ தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மாலை, மரியாதைகள் ஜீயரின் பூத உடலுக்கு சமர்ப்பிக்கப்பட்டன.

மாலை 3 மணியளவில் ஜீயரின் உடல் அலங்கரிக்கப்பட்டு காவித்துணி போர்த்தப்பட்ட மூங்கில் கூடையில் வைத்து பல்லக்கில் வைத்து மேளதாளத்துடன், அதிர்வேட்டுகள் முழங்க கொள்ளிடக்கரையில் உள்ள ஆளவந்தார் படித்துறை எனப்படும் கோவில் தோப்பிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த குழியில் மாலை 4 மணியளவில் வேதகோஷம் முழங்க ஜீயரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் ஸ்ரீரங்கா, நாராயணா, கோவிந்தா என முழக்கமிட்டபடி ஜீயர் உடல் மீது உப்பு தூவினர்.

இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் ரங்காச்சாரி, டாக்டர் சீனிவாசன், கவிதா ஆகியோர் தலைமையில் கோவில் அர்ச்சகர்கள், ஸ்தலத்தார்கள், கைங்கர்யபரரர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். 

Next Story