பள்ளி கட்டிடம் கட்டித்தரக்கோரி மாணவ-மாணவிகள் சாலை மறியல்


பள்ளி கட்டிடம் கட்டித்தரக்கோரி மாணவ-மாணவிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 July 2018 4:15 AM IST (Updated: 13 July 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

உதயநத்தம் கிராமத்தில் பள்ளி கட்டிடம் கட்டித்தரக்கோரி பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம் உதயநத்தம் கிராமத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் 678 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி கடந்த 2017-ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக இருந்து தற்போது தமிழக அரசால் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகள் ஆகியும் பள்ளி யில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு தனியாக வகுப்பறை இதுநாள் வரையிலும் அமைக்கப்படவில்லை. இந்நிலையில் அந்த மாணவர்களை பள்ளியின் வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமரவைத்து பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கரும்பலகை இல்லாத காரணத்தினால் பள்ளியின் கட்டிட வெளிப்புற சுவர்கள் கரும்பலகையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வெயிலில் அமரமுடியாமல் மாணவர்கள் சிரமப்பட்டு வந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் திடீரென ஜெயங்கொண்டம்-அணைக்கரை சாலையில் அமர்ந்து, சைக்கிள்களை நடு ரோட்டில் போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் மற்றும் வட்ட கல்வி அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:-

தங்கள் பள்ளியில் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் இருந்தும் வகுப்பறை இல்லாதது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மேலும் இரண்டு ஆண்டுகளாக மரத்தடியில் அமர்ந்து இருப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. மழைக்காலங்களில் பள்ளி விடுமுறை அறிவித்து விடுவதாகவும், இரண்டு ஆண்டுகள் ஆகியும் வகுப்பறை கட்ட எந்த நடவடிக்கையும் அரசு தரப்பில் எடுக்காததால் நாங்கள் வீதிக்கு வந்தோம். மேலும் பள்ளியில் கழிவறை வசதி இல்லாததால் பள்ளியை விட்டு வெளியில் வந்து மறைவான இடம் தேடி செல்ல வேண்டி உள்ளதாகவும், மாணவிகள் இதனால் மிகவும் சிரமப்படுவதாகவும் கூறினர்.

பள்ளியில் பொருளியியல் பாட திட்டத்திற்கு அரசு ஆசிரியர் இல்லை என்றும், தற்காலிக ஆசிரியருக்கு பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு படிக்கும் மாணவர்கள் நபர் ஒவ்வொருவரும் ரூ.200 கொடுத்து படிப்பதாகவும், அவர்கள் கொடுக்கும் தொகையே அந்த ஆசிரியருக்கு சம்பளம் கொடுப்பதாகவும் மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டது. மேலும் 7, 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு போதிய வகுப்பறை இல்லாததால் அவர்கள் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்தப்படுகிறது.

கடந்த 3 நாட்களாக பள்ளியில் குடிநீர் வரவில்லை. இதனால் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் கடைவீதிகளில் சென்று தண்ணீர் குடித்து வருவதாகவும் மாணவர்கள் கூறினர். மேலும் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வகம் இல்லை. இதனால் நாங்கள் செய்முறை பயிற்சிக்காக பஸ்சில் கட்டணம் செலுத்தி ஜெயங்கொண்டம் அரசு பள்ளிக்கு சென்று செய்முறை மேற்கொள்வதாகவும், தங்களுக்கு அறிவியல் ஆய்வக கட்டிடமும் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அதிகாரிகள் 1 மாதத்திற்குள் நபார்டு திட்டத்தின் கீழ் பள்ளி கட்டிடம் கட்டி தருவதாகவும், மேற்படி மீதமுள்ள கோரிக்கைகள் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story