மாவட்ட செய்திகள்

சிந்தாதிரிப்பேட்டையில் ‘டாஸ்மாக்’ கடை திறப்புக்கு எதிர்ப்பு + "||" + In Chintadripet TASMAC Resistance to shop opening

சிந்தாதிரிப்பேட்டையில் ‘டாஸ்மாக்’ கடை திறப்புக்கு எதிர்ப்பு

சிந்தாதிரிப்பேட்டையில் ‘டாஸ்மாக்’ கடை திறப்புக்கு எதிர்ப்பு
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் ‘டாஸ்மாக்’ கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,

சென்னை சிந்தாதிரிப்பேட்டை சாமிநாதன் தெருவில் ‘டாஸ்மாக்’ கடை புதிதாக நேற்று பகல் 12 மணிக்கு திறக்கப்பட இருந்தது. இதற்கு அப்பகுதி மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து தி.மு.க. கட்சியின் சேப்பாக்கம் பகுதி செயலாளர் எஸ்.மதன்மோகன் தலைமையில் நேற்று காலை அந்த ‘டாஸ்மாக்’ கடை முன்பு போராட்டம் நடந்தது. இதில் தி.மு.க.வினர் மற்றும் அப்பகுதி பொதுமக்களும் ஏராளமானோர் பங்கேற்றனர்.


போராட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகி தட்சிணாமூர்த்தி, பா.ஜ.க. நிர்வாகி கஜேந்திரன், காங்கிரஸ் சர்க்கிள் தலைவர் சண்முகம் உள்ளிட்டோரும் ஆதரவாளர்களும் பங்கேற்றனர். குடியிருப்பு பகுதியில் ‘டாஸ்மாக்’ கடை திறக்கக்கூடாது என்று தொடர் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதில் சமரசம் ஏற்படவில்லை. இதையடுத்து ‘டாஸ்மாக்’ நிறுவன மாவட்ட மேலாளர் முருகன், தாசில்தார் தமிழ்ச்செல்வி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின் முடிவில், அந்த தெருவில் ‘டாஸ்மாக்’ கடை திறக்கப்படாது என்று அதிகாரிகள் பொதுமக்கள் மத்தியில் உறுதி அளித்தனர். அதனைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.