நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை ஊட்டி-இத்தலார் சாலையில் 6 இடங்களில் மண் சரிவு
தொடர் மழையால் ஊட்டி-இத்தலார் சாலையில் 6 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. கூடலூர்- மைசூரு சாலையில் விரிசல் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாக பெய்து வருகிறது. நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழையால் காமராஜ் சாகர் அணை, பைக்காரா அணை, எமரால்டு அணை, கெத்தை அணை உள்ளிட்ட முக்கிய அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தண்ணீர் வரத்தும் அதிகரித்து உள்ளது. 184 அடி கொள்ளளவு கொண்ட எமரால்டு அணையில் தற்போது 137.5 அடி தண்ணீர் உள்ளது. இதனால் அணையில் அலை அடிப்பதோடு, கடல் போல் காட்சி அளிக்கிறது. மழை பெய்து கொண்டு இருப்பதால் அணை நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது.
ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான புதுமந்து, அணிக்கொரை, கேத்தி, லவ்டேல், முத்தோரை, நஞ்சநாடு, தலைகுந்தா, தீட்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் இருந்தே ஊட்டி நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு, சாரல் மழை விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது. அதன் காரணமாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, ஊட்டி படகு இல்லம், தேனிலவு படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது.
தொடர் மழையால் ஊட்டி-இத்தலார் சாலையில் எடக்காடு பகுதியில் 6 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்த தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் முருகன் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் சாலையில் விழுந்த கிடக்கும் மண்ணை அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். விவசாய விளைநிலங்களில் இருந்து மண் அடித்து வரப்பட்டு சாலையில் தேங்கும் அபாயம் உள்ளது. ஊட்டி அருகே கப்பத்தொரை கிராமத்தில் விளைநிலங்களுக்கு நடுவே செல்லும் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த கால்வாயில் கடந்த 3 நாட்களாக தண்ணீர் சென்ற வண்ணமே உள்ளது.
இது போல் கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. ஓவேலி சுண்ணாம்பு பால ஆறு, பாண்டியாறு உள்பட அனைத்து ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. கூடலூரில் 62 மி.மீட்டரும், தேவாலாவில் 92 மி.மீட்டரும் மழை அளவு பதிவாகி உள்ளது. தொடர் மழையால் பல இடங்களில் மரங்கள், மண் சரிந்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கூடலூரில் இருந்து மைசூருவுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரப்பாலம் என்ற இடத்தில் சாலையோரம் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. இதைத்தொடர்ந்து சாலையில் விரிசல் ஏற்பட்டது.
இதனால் எந்த நேரத்திலும் சாலை உடைந்து போக்குவரத்து துண்டிக்கும் அபாயம் உள்ளது. இதனால் கனரக வாகனங்கள் மட்டும் சாலையில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. தகவல் அறிந்த கூடலூர் தாசில்தார் ரவி தலைமையிலான வருவாய் துறையினர் கொட்டும் மழையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது தேசிய நெடுஞ்சாலை ஆபத்தான நிலையில் இருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த பகுதியில் வாகனங்களை இயக்காமல் இருக்க இரும்பு தடுப்புகள் அடுக்கி வைக்கப்பட்டன.
பின்னர் போலீசார் விரைந்து வந்து சாலையின் ஒருபுறம் வாகனங்களை இயக்க அனுமதித்தனர். இதனிடையே தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அய்யாசாமி உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று காலை 11 மணிக்கு நேரில் வந்து ஆய்வு நடத்தினர். அப்போது தடுப்பு சுவர் இடிந்த பகுதியில் உடனடியாக கட்டுமான பணி தொடங்கப்படும் என தெரிவித்தார். இதேபோல் கூடலூர் அருகே பாடந்தொரை பகுதியில் நள்ளிரவு ராட்சத மரம் சரிந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
இதனால் இரவு நேர போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த நிலைய அலுவலர் (பொறுப்பு) அனில்குமார் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை வெட்டும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் நேற்று காலை 3.30 மணிக்கு மரம் அகற்றப்பட்டது. பின்னர் போக்குவரத்து சீரானது. இதேபோல் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி சூண்டியில் புண்ணியமூர்த்தி என்பவரின் வீட்டின் பின்புறம் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது.
இதில் ஒருபக்க சுவர் உடைந்து விழுந்தது. தொடர்ந்து ஆத்தூர் கிராமத்தில் கலா என்பவரது வீடு பலத்த மழையால் இடிந்து விழுந்தது. இந்த சமயத்தில் கலா குடும்பத்தினர் வெளியூர் சென்று இருந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை. இதேபோல் நாடுகாணி பொன்னூர் குடியிருப்பு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.
தொடர்ந்து ஓவேலி மூலக்காடு பகுதியில் மரம் சரிந்து அப்பகுதியில் சென்ற மின்கம்பிகள் மீது விழுந்தது. இதனால் மின்சார வினியோகம் துண்டிக்கப் பட்டது. இதேபோல் பல இடங்களில் அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
பந்தலூர் தாலுகா உப்பட்டி அருகே பழைய நெல்லியாளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு மரம் விழுந்தது. இதனால் பந்தலூர்- பாட்டவயல் செல்லும் சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் அம்பலமூலா போலீஸ் நிலையம் பகுதி, ஏலமன்னா ஆகிய இடங்களில் மின்கம்பிகள் மீது மரங்கள் சரிந்து விழுந்தது. இதனால் உப்பட்டி துணை மின்நிலையத்தில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக நெல்லியாளம் அரசு தேயிலை தோட்டம், கொளப்பள்ளி, ஏலமன்னா, மழவன்சேரம்பாடி, அய்யங்கொல்லி, அம்பலமூலா, நம்பியார்குன்னு உள்பட சுமார் 150 கிராமங்கள் இருளில் மூழ்கின. இதனை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை 4 மணி வரை பழுதை சரி செய்ய முடிய வில்லை. இருப்பினும் மின்வினியோகம் சீரான முறையில் நடைபெற வில்லை. இந்த நிலையில் அம்பலமூலா அய்யப்பன் கோவில் அருகே யூகலிப்டஸ் தைல மரம் காலை 11 மணிக்கு சரிந்து விழுந்தது. இதை கண்ட பொதுமக்கள் கொட்டும் மழையில் மரத்தை அறுத்து அகற்றினர். இதனால் அய்யங்கொல்லி- பாட்டவயல் இடையே சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-
குன்னூர்-6.8, கூடலூர்-62, குந்தா-34, கேத்தி-9, கோத்தகிரி-4.1, நடு வட்டம்-36.5, ஊட்டி-12.2, கல்லட்டி-12.5, கிளன்மார்கன்-65, அப்பர்பவானி-167, எமரால்டு-44, அவலாஞ்சி-156, கெத்தை-6, கிண்ணக்கொரை-2, கோடநாடு-22, தேவாலா-92, பர்லியார்-5 என மொத்தம் 736.1 மழை பதிவாகி உள்ளது. இது சராசரியாக 43.3 ஆகும்.
Related Tags :
Next Story