ஆந்திர கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த நாகை மீனவர்கள் 19 பேர் சிறைபிடிப்பு


ஆந்திர கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த நாகை மீனவர்கள் 19 பேர் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 12 July 2018 11:00 PM GMT (Updated: 12 July 2018 8:25 PM GMT)

ஆந்திர கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த நாகை மீனவர்கள் 19 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த 7-ந் தேதி நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த முருகன் என்பவரது விசைப்படகில் எழிலரசன், கோபி, நெப்போலியன், இளங்கோவன், அஞ்சப்பன், மாணிக்கசெல்வம், கந்தன், ராம்குமார், பிரதீப் ஆகிய 9 பேரும், காரைக்காலை சேர்ந்த ஏலாட்சி அம்மாள் என்பவரது படகில் மதன், மரகதவேல், கதிர்வேல், ரகு, சித்திரவேல், ஆனந்த், மதன், ராஜூ, தமிழ், கண்ணன் ஆகிய 10 பேரும் என மொத்தம் 2 விசைப் படகுகளில் 19 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் அனைவரும் ஆந்திர மாநில கடல்பகுதியில் நேற்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது ஆந்திராவை சேர்ந்த மீனவர்கள் சிலர், நாகை மீனவர்களின் 2 விசைப் படகுகளையும், அதில் இருந்த மீனவர்கள் 19 பேரையும் சிறைபிடித்து சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த மக்கள் நேற்று கலெக்டர் சுரேஷ்குமாரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், ஆந்திரா மீனவர்களால் சிறைபிடிக்கப் பட்ட நாகை மீனவர்கள் 19 பேரையும், 2 விசைப் படகுகளையும் மீட்டுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். 

Next Story