மாவட்ட செய்திகள்

திருவான்மியூரில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை 3 பேர் கைது + "||" + Run away and run away Cut and kill 3 people arrested

திருவான்மியூரில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை 3 பேர் கைது

திருவான்மியூரில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை 3 பேர் கைது
ரவுடியை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். நண்பரின் கொலைக்கு பழிக்குப் பழியாக அவரை கொலை செய்ததாக இருவரும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.
அடையாறு,

காஞ்சீபுரம் மாவட்டம் சிறுதாவூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் தனசேகர்(வயது 36). ரவுடியான இவர் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. இவர், நேற்று முன்தினம் இரவு தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்னை அடையாறில் இருந்து பெருங்குடி கல்லுக்குட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.


திருவான்மியூர் அவ்வை நகர் பகுதியில் சென்றபோது, தனசேகரை பின்தொடர்ந்து ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், அவரை வழிமறித்தனர். உடனே தனசேகர், மோட்டார் சைக்கிளில் இருந்து குதித்து தப்பி ஓடினார்.

ஆனால் மர்மநபர்கள் இருவரும் அவரை விடாமல் ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச்சென்று விட்டனர். இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த தனசேகர், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த திருவான்மியூர் போலீசார், தனசேகரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தனசேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் கிறிஸ்டின் ஜெயசீல், சம்பவம் தொடர்பாக பெருங்குடி கல்லுக் குட்டை பகுதியை சேர்ந்த ராஜா என்ற ரைஸ் ராஜா(39), அதே பகுதியை சேர்ந்த பாரதி(30) ஆகிய 2 பேரை கைது விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் இருவரும் அளித்து உள்ள வாக்குமூலம் வருமாறு.

கொலை செய்யப்பட்ட தனசேகர், கடந்த 2012-ம் ஆண்டு வரை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியிலேயே தனது மனைவி பவானியுடன் வசித்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மதன் என்பவர், பவானியை கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் மதனை, தனசேகர் வெட்டிக்கொலை செய்தார்.

இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தனசேகர், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அந்த கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த கொலை சம்பவத்துக்கு பிறகு தனசேகர், தனது மனைவி பவானியுடன் காஞ்சீபுரம் மாவட்டம் சிறுதாவூர் பகுதிக்கு குடிபெயர்ந்தார்.

ஆனால் தனசேகர் சமீப காலமாக தனது நண்பர்களை சந்திப்பதற்கு அடிக்கடி கல்லுக்குட்டை பகுதிக்கு வந்து சென்றார். எங்கள் நண்பரான மதனை கொலை செய்த தனசேகர், எங்கள் பகுதியில், எங்கள் கண் முன்னாலேயே சந்தோஷமாக நடமாடுவதை கண்டு ஆத்திரம் அடைந்த நாங்கள் தனசேகரை கொலை செய்ய திட்டமிட்டோம்.

பழிக்குப்பழி

இதற்காக தனசேகர் வழக்கமாக வந்து செல்லும் வழியை தெரிந்து கொண்டு அவரை தீர்த்துக்கட்ட சரியான தருணம் பார்த்து கொண்டு இருந்தோம். நேற்று முன்தினம் தனசேகர் கல்லுக் குட்டை பகுதிக்கு வரும் தகவலறிந்த நாங்கள், திருவான்மியூரில் பதுங்கி இருந்தோம்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த தனசேகர், எங்களை பார்த்ததும் தப்பி ஓடினார். ஆனால் நாங்கள் அவரை விடாமல் விரட்டிச்சென்று எங்கள் நண்பரின் கொலைக்கு பழிக்குப்பழியாக அவரை வெட்டிக்கொலை செய்தோம்.

இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் கைதானவர்கள் கொடுத்த தகவலின்பேரில் பெருங்குடி கல்லுக்குட்டையை சேர்ந்த வெள்ளை சங்கர்(38) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் கைதான 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.