சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியை பொதுமக்கள் முற்றுகை


சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 12 July 2018 9:45 PM GMT (Updated: 12 July 2018 9:02 PM GMT)

சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டிக்கு மோதிராபுரம் நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. பேரூராட்சிக்கு உட்பட்ட 1, 2 மற்றும் 10 முதல் 15-வது வார்டுகளுக்கு இந்த தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் பேரூராட்சி வளாகத்தில் உள்ள மேல்நிலை தொட்டி பழுதடைந்து காணப்படுவதால், மோதிராபுரம் நீரேற்று நிலையத்தில் இருந்து நேரடியாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் அதிக அழுத்தம் காரணமாக குடிநீர் குழாய்கள் பல இடங்களில் உடைந்து விட்டது. இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த 10-வது வார்டு பொதுமக்கள் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் பேரூராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் குடிநீர் வந்து 15 நாட்கள் ஆகிவிட்டது. அதற்கு முன்பு பிடித்து வைத்த குடிநீரில் புழுக்கள் வந்து விட்டது.

எனவே சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். அதுவரைக்கும் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்றனர். 2 நாட்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டம் காரணமாக பேரூராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி பழுதடைந்து விட்டது. இந்த தொட்டியை ஆய்வு செய்த உதவி செயற்பொறியாளர் தொட்டியை பயன்படுத்த வேண்டாம் என்று கூறிவிட்டார். தற்போது உள்ள குடிநீர் தொட்டி 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்டது. இந்த நிலையில் புதிதாக ரூ.90 லட்சம் செலவில் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட உள்ளது. இந்தபணிகள் 6 மாதத்தில் முடிவடையும். இதற்கிடையில் அதுவரைக்கும் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. குடிநீர் செல்ல முடியாத மேடான பகுதிகளுக்கு கூடுதலாக வால்வு வைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story