தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் 32 இடங்களில் தகவல் பலகைகள்


தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் 32 இடங்களில் தகவல் பலகைகள்
x
தினத்தந்தி 13 July 2018 4:00 AM IST (Updated: 13 July 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் 32 இடங்களில் தகவல் பலகைகள் அமைக்கப்படுகின்றன. இதையொட்டி கல்தூண்கள் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தஞ்சாவூர்,

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருவதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய இந்த கோவில் தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல்துறை பராமரிப்பில் உள்ளது.

இங்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், முருகர், நடராஜர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த கோவிலின் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக கோவிலில் பல்வேறு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக கோவிலின் மேற்கு திருச்சுற்று மண்டபம் மற்றும் வடக்கு திருச்சுற்று மண்டபத்தில் உள்ள சிவலிங்கத்தை யாரும் தொடாமல் இருப்பதற்காக மரக்கட்டைகளால் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலின் தெற்கு திருச்சுற்று மண்டபம், வடக்கு திருச்சுற்று மண்டபம், மேற்கு திருச்சுற்று மண்டபத்தில் உள்ள கதவுகளும் சீரமைக்கப்படுகின்றன.

பெரியகோவில் வளாகத்தில் அமைந்துள்ள தரைதளம் சிறியவகை செங்கல்களால் ஆனது. இந்த செங்கல்கள் சிதிலமடைந்தும், ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டும் காட்சி அளிக்கிறது. இதையடுத்து தரைதளத்தில் உள்ள செங்கல்களை மாற்றி புதிதாக தரைதளம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதன் அடுத்த கட்டமாக பெரியகோவில் வளாகத்தில் ஆங்காங்கே தகவல் பலகைகள் வைக்கப்பட உள்ளன. கேரளாந்தகன் கோபுரத்தில் இருந்து கோவில் வளாகம் முழுவதும் 32 இடங்களில் இந்த தகவல் பலகைகள் வைக்கப்பட உள்ளன. இந்த தகவல் பலகைகள் அனைத்தும் கற்களால் ஆனது.

தரைதளத்தில் இருந்து கல்தூண்கள் பதிக்கப்பட்டு அதன் மீது சதுர வடிவிலான கல் பொருத்தப்பட்டு அதன் உள்ளே நவீன தகடுகளால் ஆன தகவல் பலகை பொருத்தப்படுகின்றன. இந்த தகவல் பலகைகளில் பெரியகோவில் பற்றிய பல்வேறு தகவல்கள், ஒவ்வொரு சன்னதி பற்றிய தகவல்களும் இடம்பெறுகின்றன. தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த தகவல் பலகைகள் இடம்பெறுகின்றன.

இதற்காக பெரியகோவில் வளாகத்தில் ஆங்காங்கே கல்தூண்கள் அமைப்பதற்காக குழி தோண்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்த பணிகள் முடிக்கப்பட்டு தகவல் பலகை பொருத்தப்படும் என இந்திய தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

Next Story