உரிமம் புதுப்பிக்காத சினிமா தியேட்டருக்கு ‘சீல்’
திருப்பூரில் உரிமம் புதுப்பிக்காத சினிமா தியேட்டருக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
நல்லூர்,
திருப்பூர் செரங்காடு பகுதியில் ரத்தினசாமியின் மகன் சதீஸ் என்பவருக்கு சொந்தமான எம்.ஜி.பி. சினிமா தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டரில் தினமும் காலை 10.30 மணி, மதியம் 2 மணி, மாலை 6 மணி மற்றும் இரவு 9.45 மணி என 4 காட்சிகள் திரையிடப்படுகிறது. இந்த சினிமா தியேட்டரில் அசுரவதம் என்ற படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த தியேட்டரின் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை என்றும், ஏற்கனவே பழைய உரிமத்தை வைத்து தியேட்டரை தொடர்ந்து இயக்கி வருவதாக திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவின் பேரில் திருப்பூர் தெற்கு தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று காலை 9.30 மணிக்கு எம்.ஜி.பி. தியேட்டருக்கு சென்றனர். பின்னர் தியேட்டர் தொடர்பான உரிமத்தை ஆய்வு செய்தனர். அப்போது அந்த தியேட்டருக்கு வழங்கப்பட்டு இருந்த உரிமம் முடிந்து விட்டதாகவும், அதன்பின்னர் தியேட்டரின் உரிமத்தை புதுப்பிக்காமல் சினிமா தியேட்டரை இயக்கியதாக தெரியவந்தது. இதையடுத்து அந்த தியேட்டரை மூடி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
தினமும் காலை 10.30 மணிக்கு காட்சிகள் தொடங்கும் என்பதால், அதற்கு பிறகு சென்றால் ரசிகர்களை சினிமா தியேட்டரில் இருந்து பாதியில் வெளியேற்ற வேண்டி வரும் என்பதால் அதிகாரிகள் காலை 9.30 மணிக்கே சென்று ஆய்வு செய்து தியேட்டரை ‘சீல்’ வைத்தனர். ஆனாலும் வழக்கம்போல் அசுரவதம் படத்தை பார்க்க ரசிகர்கள் திரண்டு வந்தனர். அப்போது தியேட்டரின் நுழைவு வாயில் கதவு மூடப்பட்டு ‘சீல்’ வைத்து இருப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
திருப்பூர் எம்.ஜி.பி. சினிமா தியேட்டரின் ‘சி’ படிவ உரிமம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ந்தேதியுடன் முடிந்து விட்டது. அதன்பின்னர் தற்காலிகமாக ‘இ’ படிவ உரிமம் புதுப்பிக்கப்பட்டது. இந்த தற்காலிக ‘இ’ படிவ உரிமமும் 30.4.2018 அன்றுடன் முடிந்து விட்டது.
அதன்பின்னர் தியேட்டர் நிர்வாகம் மீண்டும் ‘இ’ படிவ உரிமம் கேட்டு விண்ணப்பித்து இருந்தது. எனவே தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குமுறை சட்டம் 1955 விதி 97-ன்படி தற்காலிக ‘இ’ படிவ உரிமம் 2 முறைக்கு மேல் வழங்க இயலாது. எனவே ‘சி’ படிவ உரிமம் கிடைக்கும் வரை தியேட்டரின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
Related Tags :
Next Story