காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்தால் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க அலாரம் அடிக்கும் கருவி


காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்தால் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்க அலாரம் அடிக்கும் கருவி
x
தினத்தந்தி 13 July 2018 3:16 AM IST (Updated: 13 July 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தால் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிப்பதற்காக அலாரம் அடிக்கும் கருவி வைக்கப்படும் என்று மண்டல தலைமை வனப்பாது காவலர் தெரிவித்தார்.

கோவை,

கோவை கோட்ட வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள் தொந்தரவு அதிகமாக இருக்கிறது. இதை தடுக்க மலையடிவார பகுதியில் அகழி வெட்டப்பட்டாலும், ஆழம் குறைவான பகுதி வழியாக காட்டு யானைகள் வெளியே வந்து விடுகின்றன. பின்னர் அவை, ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், காட்டு யானைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த முடிய வில்லை. மேற்கு தொடர்ச்சி மலையில் பரவலாக மழை பெய்வதால், வனப்பகுதி செழிப்பாக காட்சி அளிக்கிறது. இதனால் காட்டு யானைகளின் அட்டகாசம் குறைந்து உள்ளது.

இந்த நிலையில், காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்கவும், யானைகள்- மனித மோதலை தடுக்கவும் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதற்கான சிறப்பு திட்ட அறிக்கை தயாரித்து, அனுமதிக்காக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

அதுபோன்று அகழியில் எந்த இடங்களில் ஆழம் குறைவாக இருக்கிறது என்பதையும் வனத் துறை யினர் ஆய்வு செய்து வருகிறார்கள். இரவு நேரத்தில் வனப்பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் மலையடிவார கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு வனத்துறை சார்பில் விழிப்புணர்வு நோட்டீசும் வழங்கப்பட்டு வருகிறது.

கோவை வனக்கோட்டத்தில் மனித-மிருக மோதலை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து கோவை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் தீபக்வத்சவா நிருபர்களிடம் கூறியதாவது:-

காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விட்டால், அந்த பகுதி பொதுமக்களுக்கு தெரிவது இல்லை. எனவே முதலில் அதை தெரியப்படுத்த மலையடிவார கிராமங்களில் அலாரம் அடிக்கும் கருவி வைக்க முடிவு செய்து உள்ளோம். ஒரு இடத்தில் அலாரம் அடிக்கும் கருவியை வைத்தால் குறைந்தது 100 வீடுகளுக்கு அதன் சத்தம் கேட்கும்.

இந்த திட்டத்தின்படி வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் யானை பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அதற்கு என்று சிறப்பு வாகனங்களும் வாங்கப்பட உள்ளன. எந்த பகுதியிலாவது காட்டு யானைகள் நுழைந்து விட்டால், அங்கு வைக்கப்பட்ட இருக்கும் அலாரத்தை ஒலிக்க வைப்பார்கள். இதன் மூலம் அங்கு காட்டு யானைகள் நுழைந்து விட்டது என்று பொதுமக்கள் அறிந்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விடுவார்கள்.

இந்த திட்டம் சோதனை அடிப்படையில் முதன் முதலில் போளுவாம்பட்டி வனச்சரக பகுதியில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதற்குரிய அனுமதி கிடைத்ததும் உடனடியாக அலாரம் வைக்கப்படும். இந்த திட்டம் வெற்றி பெற்றால், கோவை கோட்ட வனப்பகுதிக்கு உட்பட்ட காட்டு யானைகள் அட்டகாசம் அதிகமாக இருக்கும் அனைத்து மலையடிவார கிராமங்களிலும் அலாரம் வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story