மகளிர் சுயஉதவிக்குழு தலைவி வீட்டில் 60 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் கொள்ளை


மகளிர் சுயஉதவிக்குழு தலைவி வீட்டில் 60 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் கொள்ளை
x
தினத்தந்தி 13 July 2018 3:26 AM IST (Updated: 13 July 2018 6:17 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே பட்டப்பகலில் மகளிர் சுய உதவிக்குழு தலைவியின் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை, ரூ.70ஆயிரம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆம்பூர், 

ஆம்பூர் அருகே பட்டப்பகலில் மகளிர் சுய உதவிக்குழு தலைவியின் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை, ரூ.70ஆயிரம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வடபுதுப்பட்டு எம்.சி.ரோட்டில் வசித்து வருபவர் சத்தியவாணி (வயது 35). இவர் அப்பகுதியில் மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக உள்ளார். இவரது கணவர் சீனிவாசன் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை குடியாத்தம் அருகே வளத்தூர் கிராமத்தில் தனது உறவினர் ஒருவருக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டார். மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் இரும்பு கேட் கதவு பூட்டு உடைக்கப்பட்டும், உள்ளே இருந்த கதவின் பூட்டு உடைக்கப்பட்டும் இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சத்தியவாணி உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 60 பவுன் நகைகள் மற்றும் ரூ.70 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.13 லட்சம் வரை இருக்கும் என தெரிகிறது.

இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்களை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

Next Story