பேரணாம்பட்டு அருகே 2 குட்டிகளுடன் சிறுத்தை நடமாட்டம்
பேரணாம்பட்டு அருகே 2 குட்டிகளுடன் சிறுத்தை நடமாடுவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
பேரணாம்பட்டு,
வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு, ஆந்திர மாநில எல்லைக்கு அருகாமையில் உள்ளது. இதனையொட்டி பல்லலக்குப்பம் காப்புக்காடு உள்ளது. இந்த காப்புக்காட்டில் யானை, சிறுத்தை, கரடி உள்பட பல்வேறு வகையான விலங்குகள் வசித்து வருகின்றன. பல்லலக்குப்பம் காப்புக்காடுகளையொட்டி உள்ளி வனப்பகுதி உள்ளது.
இந்த பகுதியில் உள்ளி, பரவக்கல், பொகளூர், செம்பேடு, வளத்தூர், பட்டுவாம்பட்டி, சிங்கல்பாடி, அலங்காநல்லூர் என பல்வேறு கிராமங்கள் உள்ளன. பல்லலக்குப்பம் காப்புக்காடுகளில் வசிக்கும் வனவிலங்குகள் உள்ளி வனப்பகுதிக்குள் புகுந்து சுற்றி திரிகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. பேரணாம்பட்டு - மேல்பட்டி சாலையில் சிறுத்தைகள் கடந்து செல்வதையும், மலைப்பகுதியை தாவி செல்வதையும் பலர் பார்த்துள்ளனர்.
உள்ளி கிராமத்தில் ரெயில்வே பாலத்தின் அருகில் மலைப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் வனத்துறை சார்பில் சமூக காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் செடிகள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை அந்த கிராமத்தை சேர்ந்த 2 பேர் இயற்கை உபாதை கழிப்பதற்காக வனப்பகுதிக்கு சென்றனர். அப்போது ஒரு பாறை அருகில் உள்ள புதர் அருகே தான் ஈன்ற 2 சிறுத்தை குட்டிகளுடன் தாய் சிறுத்தை பயங்கர சத்தத்துடன் உறுமிக்கொண்டிருந்தது. இதனை பார்த்த 2 பேரும் உயிர் தப்பித்தால் போதும் என்று அங்கிருந்து ஓட்டம்பிடித்து ஊருக்குள் திரும்பினர்.
இதுகுறித்து பேரணாம்பட்டு வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனவர் முருகன் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “வனப்பகுதிக்குள் சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் நடமாடுகின்றன. எனவே அங்கு தனியாகவோ ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லவோ, விறகு வெட்டவோ செல்லக்கூடாது. சிறுத்தைகள் நடமாட்டம் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து அதனை பார்த்தால் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என்றனர். மேலும் சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story