மாவட்ட செய்திகள்

தனியார் நிதிநிறுவன பெண் ஊழியரிடம் நூதன முறையில் ரூ.4 ஆயிரம் அபேஸ் + "||" + The private financial institution employee has a Rs 4,000 allowance for the novel

தனியார் நிதிநிறுவன பெண் ஊழியரிடம் நூதன முறையில் ரூ.4 ஆயிரம் அபேஸ்

தனியார் நிதிநிறுவன பெண் ஊழியரிடம் நூதன முறையில் ரூ.4 ஆயிரம் அபேஸ்
ஆரணியில் தோஷம் கழிப்பதாக கூறி தனியார் நிதி நிறுவன பெண் ஊழியரிடம் நூதன முறையில் ரூ.4 ஆயிரத்து 100-ஐ மோசடி செய்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி,


ஆரணி காந்தி ரோடு பகுதியில் தனியார் கூட்டுறவு சங்க நிதிநிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நிதி நிறுவனத்தில் அம்சவேணி (வயது 22) என்ற ஊழியர் பணிபுரிந்து வருகிறார்.

இவர் நேற்று காலை 11 மணியளவில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது லுங்கி உடுத்திக்கொண்டு ஒரு நபர் வந்து அவரிடம் பேச்சு கொடுத்தார். அப்போது அவர் உங்களுக்கு திருமணம் நடைபெறாததற்கு காரணம் தோஷம் உள்ளது. அதை நீக்கினால் விரைவில் திருமணம் நடைபெறும் என்று கூறினார்.

இதையடுத்து அந்த நபர் மாந்திரீக செயலில் ஈடுபடுவது போன்று சைகை காட்டினார். பின்னர் அம்சவேணி சுயநினைவை இழந்துவிட்டார்.

அப்போது அவர் பணப்பெட்டியில் இருக்கும் பணத்தை கேட்டவுடன் அதில் இருந்த பணத்தை அம்சவேணி எடுத்து அவரிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த நபர் அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.

சிறிதுநேரம் கழித்து சுயநினைவு வந்ததும் அம்சவேணி பணப்பெட்டியை பார்த்தபோது அதில் இருந்த ரூ.4 ஆயிரத்து 100-ஐ காணவில்லை. அந்த நபர் பணத்தை நூதன முறையில் அபேஸ் செய்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து நிதிநிறுவன ஊழியர்களிடம் அம்சவேணி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஊழியர்கள் வெளியே சென்று அவரை தேடினர். அப்போது அந்த நபர் பக்கத்து தெருவில் நின்று கொண்டிருந்தார். அவரை ஊழியர்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து பணத்தை வாங்கிக் கொண்டு அவரை ஆரணி டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் செய்யாறு தாலுகா மேல்பூதேரி பகுதியை சேர்ந்த சந்தோஷ் (வயது 25) என்பதும், ‘பூம்பூம்’ மாட்டுக்காரர் என்பதும் தெரிய வந்தது. மேலும் சந்தோசிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.