குழந்தைகளை கடத்த வந்ததாக பீதி: பிஸ்கெட் பாக்கெட்டுகளுடன் திரிந்த பெண்ணை தாக்கிய கிராம மக்கள் போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்


குழந்தைகளை கடத்த வந்ததாக பீதி: பிஸ்கெட் பாக்கெட்டுகளுடன் திரிந்த பெண்ணை தாக்கிய கிராம மக்கள் போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
x
தினத்தந்தி 13 July 2018 5:19 AM IST (Updated: 13 July 2018 5:19 AM IST)
t-max-icont-min-icon

மேலூர் அருகே கையில் பிஸ்கெட் பாக்கெட்டுகளுடன் திரிந்த பெண்ணை, குழந்தைகளை கடத்த வந்தவர் என நினைத்து கிராம மக்கள் தாக்கினர். பெண்ணை மீட்ட போலீசார், அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மேலூர்,

மேலூர் அருகே பதினெட்டான்குடி கிராமத்தில் நைட்டி அணிந்த பெண் ஒருவர் கையில் ஏராளமான பிஸ்கெட் பாக்கெட்டுகளுடன்சுற்றி திரிந்தார். இதை பார்த்த அந்த பகுதி கிராம மக்கள், குழந்தைகள் கடத்தப்படுவதாக ஏற்கனவே கடந்த சில நாட்களாக வாட்ஸ்-அப்பில் பரவிய படத்தில் இருந்த பெண் போல தெரிந்ததும், அவர்கள் அந்த பெண்ணை கட்டி வைத்து அடித்து விசாரிக்க ஆரம்பித்தனர்.

அப்போது அந்த பெண் எதுவும் பதில் கூறாமல் இருந்ததால், பொதுமக்களுக்கு சந்தேகம் மேலும் வலுவடைந்து குழந்தைகளை கடத்த வந்த வடமாநில பெண் என்று அச்சம் ஏற்பட்டது. அந்த பெண்ணை சோதனை செய்த போது, அவர் தனது ஆடையில் 15-க்கும் மேற்பட்ட பல வகையான பிஸ்கெட் பாக்கெட்டுகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இந்த செய்தி சுற்றுவட்டார பகுதிகளில் பரவியதும் அங்கு ஏராளமானவர்கள் திரண்டனர்.


தகவலறிந்த மேலூர் போலீசார் அங்கு விரைந்து சென்று பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு, மனநிலை பாதிக்கப்பட்டவரா என்று டாக்டர்கள் பெண்ணை சோதனை செய்து வருகின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், எங்கள் ஊருக்கு 2 பெண்கள் வந்தனர். அதில் ஒருவர் தப்பியோடி விட்டார். இந்த பெண் மட்டும் பிஸ்கெட் பாக்கெட்டுகளுடன் குழந்தைகளிடம் நெருங்கி பேசி வந்தார் என்றனர். கிராம மக்கள் தாக்கிய பெண் வடமாநிலத்தை சேர்ந்தவர் போல தெரிந்தாலும் பேச மறுத்து வருகிறார். இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பெண் யார், பிஸ்கெட் பாக்கெட்டுகளுடன் ஏன் சுற்றி திரிந்தார் என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story