கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய விவசாய கடன் ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி


கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய விவசாய கடன் ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி
x
தினத்தந்தி 12 July 2018 11:55 PM GMT (Updated: 12 July 2018 11:55 PM GMT)

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய விவசாய கடன் அதாவது நடப்பு கடன் ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டசபையில் முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்தார்.

கர்நாடக விவசாயிகளுக்கு மேலும் ஒரு சலுகையாக   அமைந்து உள்ளது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் கடந்த 5-ந் தேதி முதல்-மந்திரி குமாரசாமி 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அதன் மீது சபையில் விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்திற்கு குமாரசாமி நேற்று பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தலில் எங்கள் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரசின் ஆதரவில் நாங்கள் ஆட்சி அமைத்துள்ளோம். முழு பெரும்பான்மை வந்தால் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக நாங்கள் வாக்குறுதி அளித்தோம். ஆயினும் பட்ஜெட்டில் ரூ.34 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்து அறிவித்துள்ளேன்.

இதை பாராட்டாமல் பா.ஜனதாவினர் என்னை திட்டுகிறார்கள். நான் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை அமல்படுத்துவதாக கூறி இருக்கிறேன். இந்த விவசாய கடன் தள்ளுபடி திட்டத்திற்கு சாதி சாயம் பூசுகிறார்கள். மண்டியா, ராமநகர், ஹாசன் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இந்த கடன் தள்ளுபடி திட்டத்தால் அதிகம் பயன் பெறுகிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.

இந்த விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில் பெங்களூரு மண்டலத்தில் ரூ.6,300 கோடி, பெலகாவி மண்டலத்தில் ரூ.9,501 கோடி, கலபுரகி மண்டலத்தில் ரூ.5,563 கோடி, மைசூரு மண்டலத்தில் ரூ.6,750 கோடி வருகிறது. பட்ஜெட்டில் நிலுவையில் உள்ள கடன் தள்ளுபடி செய்வதாக சொன்னேன். நடப்பு கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

அதன்படி கூட்டுறவு வங்கிகளில் உள்ள நடப்பு விவசாய கடன் ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படும். அன்ன பாக்கிய திட்டத்தில் ஏழை குடும்பங்களை சேர்ந்தவர் களுக்கு மாதம் தலா 7 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. அதில் 2 கிலோ அரிசியை குறைப்பதாக பட்ஜெட்டில் அறிவித்தேன். காங்கிரஸ் உள்பட பல்வேறு தரப்பினர் பழைய நிலையே தொடர வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதுபற்றி பரிசீலித்து முடிவு எடுப்பேன்.

மின்சார வரி உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.182 கோடி வருவாய் கிடைக்கும். பெட்ரோல்-டீசல் மீதான விற்பனை வரி சிறிது உயர்த்தப்பட்டுள்ளது. அவ்வாறு வரி உயர்த்தப்பட்ட பிறகும் அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கர்நாடகத்தில் அவற்றின் விலை குறைவாக தான் உள்ளது. இந்த வரி உயர்வால் அரசுக்கு சிறிது வருவாய் கிடைக்கும்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா குறுக்கிட்டு, “தேர்தல் அறிக்கையில் கூறியபடி நீங்கள் விவசாய கடனை தள்ளுபடி செய்யவில்லை. ரூ.34 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்து இருக்கிறீர்கள். ஆனால் பட்ஜெட்டில் அதற்கான நிதியை ஒதுக்கவில்லை. கடன் தள்ளுபடிக்கு நிதி எங்கிருந்து திரட்டுகிறீர்கள்?. உங்களால் இதை செய்ய முடியாது. இது சாத்தியம் இல்லை” என்றார்.

அதற்கு பதிலளித்து பேசிய குமாரசாமி, “உங்களால் முடியாது, என்னால் அது முடியும். ராமநகர், மண்டியா, ஹாசன் ஆகிய மாவட்டங்கள் கடந்த 25 ஆண்டுகளாக வளரவில்லை. அந்த மாவட்டங்களின் நிலை மோசமாக உள்ளது. அதன் காரணமாக அந்த மாவட்டங்களுக்கு பட்ஜெட்டில் சிறிது நிதியை ஒதுக்கி இருக்கிறேன். இதை பா.ஜனதாவினர் பெரிய அளவில் குறை சொல்கிறார்கள். ஹாசனுக்கு நிதி வேண்டாம் என்று அங்குள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ. சொல்லட்டும். அந்த நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்துவிடுகிறேன். இலவச பஸ் பாஸ் திட்டம் குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. அந்த திட்டத்திற்கு 75 சதவீத நிதியை வழங்குவது குறித்தும் அரசு ஆலோசனையில் உள்ளது” என்றார்.

பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்குமாறு குமாரசாமி கேட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதற்கிடையே பட்ஜெட் மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து சபை இன்றைக்கு(வெள்ளிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது.

சட்டசபை 12-ந் தேதியுடன்(நேற்று) நிறைவடையும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. பா.ஜனதா உறுப்பினர்கள் வற்புறுத்தியதை அடுத்து கூட்டத்தொடர் ஒரு நாள் மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இன்றுடன் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைகிறது. இன்று சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படுகிறது. 

Next Story