உயிருக்கு உலைவைக்கும் மருத்துவக் கழிவுகள்


உயிருக்கு உலைவைக்கும் மருத்துவக் கழிவுகள்
x
தினத்தந்தி 13 July 2018 4:08 AM GMT (Updated: 13 July 2018 4:08 AM GMT)

அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப மனித இனத்தின் அழிவுக்கான வழிகளும் திறந்தே இருக்கின்றன. தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தாதது, இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியால் விளைந்த தொழிற்சாலை போன்றவற்றால் வெளியாகும் கழிவுப் பொருட்களின் அளவு பன்மடங்கு அதிகரித்துவிட்டது. அதுமட்டுமின்றி, அந்த கழிவுகள் நச்சுத்தன்மை வாய்ந்ததாகவும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பவையாகவும் இருக்கின்றன.

உதாரணமாக தொழிற்சாலை கழிவுகளை எடுத்துக்கொள்வோம். தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் கழிவு நீர் நன்னீரில் கலந்து தண்ணீரை மாசுபடுத்துகிறது. தொழிற்சாலையின் நச்சுப் புகை நாம் சுவாசிக்கும் காற்றில் கலக்கிறது. இப்படி அறிவியல் கண்டுபிடிப்புகளால் விளைந்த பொருட்களை நாம் பயன்படுத்தும்போது மிஞ்சும் கழிவுகளால் நிலம், நீர், காற்று என சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

இதனால் எத்தனை எத்தனையோ நோய்கள் நம்மை சீண்டிப் பார்க்கின்றன. புதுப்புது நோய்களையும் குணமாக்கும் வகையில் மருத்துவம் அசாத்திய வளர்ச்சியை கண்டு வருகிறது என்றாலும், மருத்துவமனைகளிலும் உயிருக்கு வேட்டு வைக்கும் கழிவுகள் மிஞ்சுகின்றன என்பதுதான் வேதனை.

இதனால் தான் மருத்துவ கழிவுகளை கையாளுவதில் அதீத விழிப்போடு இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் மருத்துவ கழிவுகளால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி அறிந்திருந்தாலும், அவற்றை பாதுகாப்பாக அழிக்க வேண்டும் என்ற அக்கறை தான் இல்லை.

மருத்துவ கழிவுகளை கண்ட, கண்ட இடங்களில் கொட்டி விடுகிறார்கள். குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் மிஞ்சும் கழிவுகள் குடியிருப்புகளின் ஒதுக்குப்புறத்தில் கொட்டப்படுகின்றன. எங்கோ இருக்கும் மருத்துவமனைகள் நம் கிராமங்களின் ஒதுக்குப்புறத்தில் மருத்துவக்கழிவுகளை கொட்டிச் செல்வதை இன்னமும் பார்க்க முடியும்.

இத்தகைய மருத்துவ கழிவுகள் பேராபத்தை விளைவிக்கக் கூடும். அதாவது, பயன்படுத்தப்பட்ட ஊசிகளை முறையாக அழிக்காததால் எய்ட்ஸ் உள்ளிட்ட 3 நோய்கள் பரவுவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக கடந்த 2008-ம் ஆண்டு மருத்துவக்கழிவு கையாளுதல் குறித்த திட்டம் தமிழக அரசால் கொண்டுவரப்பட்டது.

ஆனால் தற்போதைய ஆய்வில், பயன்படுத்தப்பட்ட ஊசி மூலம் சுமார் 33 நோய்கள் பரவுவதாக கண்டறியப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து மருத்துவக்கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. இதற்காக தமிழகம் முழுவதும் அரசு சார்பில் 7 மருத்துவ கழிவு மேலாண்மை பயிற்சி மையங்களும், தனியார் சார்பில் 4 பயிற்சி மையங்களும் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த பயிற்சி 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதில் முதற்கட்டமாக, அரசு ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டர்கள் முதல் சுகாதார பணியாளர்கள் வரை அனைவருக்கும் தலா ஒரு நாள் வீதம் 6 மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. வாரம் இருமுறை நடந்த இப்பயிற்சியில் நாளொன்றுக்கு 40 பேர் பயிற்சி பெற்றனர்.

மதுரை மண்டலத்தில் மட்டும், மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் வேலைபார்க்கும் சுமார் 25 ஆயிரம் பேருக்கு இந்த பயிற்சி வழங்கப்பட்டது. இதில் சிவப்பு, வெள்ளை, ஊதா, கருப்பு குப்பை தொட்டிகளில் கொட்ட வேண்டிய கழிவுகள் பற்றி விளக்கப்பட்டது.

சிவப்பு பெட்டியில் கெட்டுப்போன கையுறைகள், ஊசிகள், பஞ்சு ஆகிய கழிவுகளும், மஞ்சள் பெட்டியில் உடல் உறுப்புக் கழிவுகளும், கருப்பு பெட்டியில் காலாவதியான மருந்துகளும், வேதிப்பொருள்களும், ஊதா நிற பெட்டியில் பயன்படுத்தப்பட்ட ஊசி, ஆபரேசனுக்கு பயன்படுத்தப்பட்ட கூர்மையான பொருள்களும் கொட்டப்பட வேண்டும்.

உடற்கழிவுகள் மாசுக்கட்டுப் பாட்டு வாரிய விதிகளின் படி எரிக்கப்படும். கூர்மையான பொருள்கள் அனைத்தும் பூமிக்கு அடியில் பெரிய சிமெண்டு தொட்டியில் நடுவில் துளையிடப்பட்டு சேகரிக்கப்படும். தொட்டி நிறைந்தவுடன் நடுப்பகுதி சீல் வைக்கப்பட்டு மருத்துவக் கழிவு முத்திரை வைக்கப்படும். இந்த முத்திரை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழியாது.

நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள்கள், மாத்திரைகள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிப்படி பூமிக்கு அடியில் புதைக்கப்படும். இதனால் காற்று, நீர் மற்றும் மண் வளம் பாதிக்கப்படும் அபாயம் குறையும்.

அரசு மருத்துவ பணியாளர்களுக்கு பின்னர் தனியார் மருத்துவ மனைகளில் வேலை பார்ப்பவர்களுக்கும் இந்த பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்றளவும் இந்த திட்டம் முறையான கண்காணிப்பு இல்லாமல் பல்வேறு தீங்குகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் மருத்துவக் கழிவுகளை மேற்கண்ட முறைப்படி அழிப்பதில்லை. பல இடங்களில் மருத்துவ கழிவுகளை மூட்டைகளில் கட்டி, குப்பைகளோடு குப்பையாக கொட்டி விடுகிறார்கள். இதனால் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயமும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பேராபத்தும் தொடர்கதையாகிவிட்டது.

ஆனால், இவற்றை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் மவுனம் சாதிப்பதில் துளியும் அர்த்தமில்லை. நமக்கும், சுற்றுச்சூழலுக்கும் எமனாகும் மருத்துவக் கழிவுகளை முறையாக அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

Next Story