கழுகுமலை அருகே பரபரப்பு ஒரு மாதத்துக்கு முன்பு மாயமான மாணவன் எலும்புக்கூடாக மீட்பு கொலையா? போலீசார் விசாரணை
கழுகுமலை அருகே ஒரு மாதத்துக்கு முன்பு மாயமான மாணவன் எலும்புக்கூடாக மீட்கப்பட்டான். அவன் கொலை செய்யப்பட்டானா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கழுகுமலை,
கழுகுமலை அருகே ஒரு மாதத்துக்கு முன்பு மாயமான மாணவன் எலும்புக்கூடாக மீட்கப்பட்டான். அவன் கொலை செய்யப்பட்டானா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனித எலும்புக்கூடு
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே பழங்கோட்டையில் உள்ள கண்மாயின் அருகில் நீர்வரத்து கால்வாயில் நேற்று மனித எலும்புக்கூடு ஒன்று கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து குருவிகுளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று, அந்த எலும்புக்கூட்டை மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் எலும்புக் கூடாக கிடந்தது கடந்த மாதம் மாயமான சிறுவன் மதன்குமார் என்பது தெரிய வந்தது. சிறுவனின் பெற்றோரை அழைத்து எலும்புக்கூட்டை காண்பித்த போது இறந்தது மதன்குமார் என்பது உறுதியானது. தொடர்ந்து எலும்புக்கூட்டை போலீசார் கைப்பற்றி, பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் மேல் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-
8-ம் வகுப்பு மாணவன்
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அண்ணா புது தெருவைச் சேர்ந்தவர் ராஜகோபால். தச்சு தொழிலாளி. இவருடைய மகன் மதன்குமார் (வயது 13). இவன் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
இவன் கடந்த 9-6-2018 அன்று மாலையில் தனது வீட்டில் இருந்து வெளியே சென்றான். பின்னர் அவன் வீட்டுக்கு திரும்பி வராமல் மாயமானான். இதுகுறித்த புகாரின்பேரில், கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ராஜகோபால் வீட்டின் அருகில் அவருடைய அண்ணன் கதிரேசன் வசித்து வருகிறார். இவருடைய மகன் மணிகண்டன் (29). தச்சு தொழிலாளியான இவர் கடந்த 11-6-2018 அன்று கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் எதிரில் உள்ள தண்டவாளத்தில் ரெயில் மோதி உடல் துண்டான நிலையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தூத்துக்குடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே மாயமான மதன்குமாரை கடைசியாக மணிகண்டன்தான் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.
கொலையா?
எனவே மணிகண்டன் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்ததற்கும், சிறுவன் மதன்குமார் மாயமானதற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மாயமான மதன்குமாரையும் போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
மதன்குமார் மாயமான 2-வது நாளில் மணிகண்டன் ரெயில் மோதி இறந்து உள்ளார். எனவே மணிகண்டன், மதன்குமாரை அழைத்து சென்று கொலை செய்த பின்னர், போலீசாருக்கு பயந்து ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்தாரா? இதற்கு வேறு யாரேனும் உடந்தையா? என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story