காரைக்குடி பகுதியில் விவசாய பணிகள் தொடக்கம்


காரைக்குடி பகுதியில் விவசாய பணிகள் தொடக்கம்
x
தினத்தந்தி 13 July 2018 11:30 PM GMT (Updated: 13 July 2018 6:14 PM GMT)

ஆடி மாதம் பிறக்க உள்ள நிலையில் காரைக்குடி பகுதியில் விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.

காரைக்குடி

ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள், இந்த ஆண்டு இன்னும் சில நாட்களில் ஆடி மாதம் பிறக்க உள்ளது. இதையொட்டி காரைக்குடி அருகே பள்ளத்தூர், கொத்தரி, கொத்தமங்கலம், உ.சிறுவயல், சாக்கோட்டை, புதுவயல், திருவேலன்குடி, ஆத்தங்குடி, பலவான்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் விவசாயிகள் தங்களது நிலங்களில் விவசாய பணிகளை தொடங்குவதற்காக உழவார பணியில் ஈடுபட்டுஉள்ளனர்.

காரைக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட இந்த பகுதியில் சுமார் 40 ஆயிரம் எக்டேரில் நெல் விதைப்பு பணிகள் தொடங்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால் விவசாயம் கேள்விக்குறியாக உள்ளது.

இதையொட்டி இந்தஆண்டு கடந்த சில மாதங்களாக காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நல்ல மழை பெய்ததால் சில இடங்களில் உள்ள கண்மாய்களில் விவசாயத்திற்கு ஏற்றாற்போல் ஓரளவு தண்ணீர் நிரம்பி உள்ளது.

இதனால் இந்த பகுதியில் விவசாயிகள் தங்களது நிலத்தில் விவசாய பணிகளை உற்சாகத்துடன் தொடங்கி உள்ளனர். குறிப்பாக ஆடி மாதத்தில் விதை விதைத்தால் நல்ல மகசூல் கிடைக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கையாகும். இதையடுத்து காரைக்குடி அருகே உள்ள கொத்தரி, திருவேலன்குடி ஆகிய பகுதியில் விவசாயிகள் தங்களது நிலங்களில் விவசாய பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக பருவமழை தாமதம், போதிய மழை இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் குறைந்த காலத்தில் மகசூல் தரக்கூடிய நெல் ரகங்கள் வருகையாலும் பிறக்க உள்ள ஆடி மாதத்தில் நெல்விதைப்பு பணியில் பெரும்பாலான விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர்.

இதனால் பூச்சி நோய் தாக்குதல், மகசூல் இழப்பு உள்ளிட்ட பல்வேறு நஷ்டங்களை சந்திப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். இது குறித்து விவசாய பணியில் ஈடுபட்டுள்ள ஆறுமுகம் என்பவர் கூறியதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களாக பெய்த மழையினால் அப்பகுதியில் உள்ள கண்மாயில் ஓரளவு தேங்கிய தண்ணீரை நம்பி உழவார பணியில் ஈடுபட்டுஉள்ளோம். ஆடி பட்டம் தேடி விதை என்று சொல்வார்கள்.

இதையடுத்து எங்களது நிலங்களில் தற்போது இந்த பணியை தீவிரப்படுத்தி உள்ளோம். இன்னும் சில மாதங்கள் போதிய மழை பெய்தால் அதன் மூலம் குறுகியகால சாகுபடி நெல் பயிரை விதைப்பு செய்து ஓராண்டிற்குரிய நெல்லை அறுவடை செய்ய உதவியாக இருக்கும். தற்போது மாவட்டத்தில் உள்ள வேளாண்மை அலுவலகங்களில் விதை நெல் இருப்பு வைக்கப்பட்டுஉள்ளது. இந்த உழவார பணி முடிந்தவுடன் குறுகிய கால பயிர் விதை பயிரிடலாம் என்று முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story