தண்ணீர் திறந்து விட வேண்டும் விவசாயிகள் கோரிக்கை


தண்ணீர் திறந்து விட வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 14 July 2018 3:30 AM IST (Updated: 14 July 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூர் ராஜ வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பரமத்தி வேலூர்,

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள ஜேடர்பாளையம் படுகையணை பகுதியில் இருந்து பாசனத்திற்காக ராஜ வாய்க்கால் பிரிக்கப்பட்டு நன்செய் இடையாறு வரை செல்கிறது. கொமராபாளையம், பொய்யேரி மற்றும் மோகனூர் ஆகிய வாய்க்கால்கள் இந்த ராஜ வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்கிறது. இந்த வாய்க்கால் பாசனத்தை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ள நெல், வாழை, வெற்றிலை, கரும்பு, மஞ்சள், கோரை உள்ளிட்ட பயிர்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜ வாய்க்காலுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் மட்டும் பராமரிப்பு மற்றும் தூர் வாரும் பணிக்காக தண்ணீர் நிறுத்தப்படுவது வழக்கம்.

ஆனால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய அளவு மழை இல்லாததாலும், மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாமல் இருந்ததாலும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. குடிநீர் தேவைக்காக மட்டுமே வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜ வாய்க்காலுக்கு பாசனத்திற்கான திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது.

இதுவரை ராஜ வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படாமலே உள்ளது. இதனால் ராஜ வாய்க்கால் பாசனத்தை நம்பி வாழை, வெற்றிலை, நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு விவசாயிகள் ஆழ்துளை கிணறுகளில் இருந்து மின் மோட்டார்கள் மூலமும், தண்ணீரை பணம் கொடுத்தும் வாங்கி பாய்ச்சி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பாண்டமங்கலம், பொத்தனூர் மற்றும் வேலூர் பேரூராட்சிகளின் மூலம் ராஜ வாய்க்காலில் கலக்கப்படும் கழிவுநீரை எந்திரங்கள் மூலமும் பயிர்களுக்கு தண்ணீரை பாய்ச்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது கர்நாடக மாநிலத்தில் போதிய அளவு மழை பெய்து வரும் நிலையில் அங்கிருந்து வரும் தண்ணீர் அளவு அதிகரித்து மேட்டூர் அணையில் நீர்மட்டம் நேற்று 75 அடியாக உயர்ந்த நிலையில் குடிநீர் பயன்பாட்டிற்காக 1,000 கனஅடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வாடும் பயிர்களை காக்க தமிழக அரசு உடனடியாக ராஜ வாய்க்காலில் தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story