தண்ணீர் தொட்டிக்குள் தூக்கிப்போட்டு 2 குழந்தைகளை கொன்று விட்டு தாய் தீக்குளித்து தற்கொலை முயற்சி


தண்ணீர் தொட்டிக்குள் தூக்கிப்போட்டு 2 குழந்தைகளை கொன்று விட்டு தாய் தீக்குளித்து தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 13 July 2018 11:15 PM GMT (Updated: 13 July 2018 8:00 PM GMT)

மங்கலம் அருகே 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டிக்குள் தூக்கிப்போட்டு கொன்று விட்டு, தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற தாய், ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மங்கலம்,

மங்கலம் அருகே 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டிக்குள் தூக்கிப்போட்டு கொன்ற சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே உள்ள பூமலூர் செட்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் செந்தில் என்கிற தியாகராஜன் (வயது 37). நூற்பாலை அதிபரான இவர் பூமலூர் ஊராட்சி முன்னாள் தலைவராக இருந்துள்ளார். இவருடைய மனைவி சிவரஞ்சனி (32). இவர்களுக்கு ஸ்ரீஹர்சந்த் (7) என்ற மகனும், ஹர்சிதா என்ற 8 மாத கைக்குழந்தையும் இருந்தனர். ஸ்ரீஹர்சந்த் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். இதே காம்பவுண்டில் தியாகராஜனின் அண்ணன் விஜயகுமாரும், அவருடைய மனைவி சசிரேகாவும் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தியாகராஜன் வெளியூர் சென்று விட்டார். இதனால் சிவரஞ்சனி தனது குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் வெளியூர் சென்ற தியாகராஜன் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். பின்னர் வீட்டில் குழந்தைகளுடன் இரவு உணவை சாப்பிட்டு விட்டு அனைவரும் படுத்து தூங்கினார்கள்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு வீட்டின் முற்றத்தில் இருந்து வலியால் துடித்தபடி “ காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்று சிவரஞ்சனி கூச்சல் போட்டுள்ளார். இவருடைய குரல் கேட்டு, படுக்கையில் இருந்து திடுக்கிட்டு எழுந்த சசிரேகா வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தார். அப்போது சிவரஞ்சனி தீயில் எரிந்து கொண்டிருப்பதை பார்த்து திடுக்கிட்டார்.

உடனே சசிரேகா தனது கணவரையும், கணவரின் தம்பியையும் படுக்கையில் இருந்து எழுப்பி, சிவரஞ்சனி மீது பற்றி எரியும் தீயை அணைக்க சாக்குக்களை எடுத்து வந்தனர். அதற்குள் வலி தாங்க முடியாத சிவரஞ்சனி வீட்டின் முற்றத்தில் இருந்த தரை மட்ட தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தார். இதையடுத்து அருகில் உள்ளவர்கள் துணையுடன், சிவரஞ்சனியை தொட்டியில் இருந்து மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஆம்புலன்சில் ஏற்றினர்.

இதற்கிடையில் வீட்டில் படுத்து இருந்த குழந்தைகளை காணாததால் அவர்கள் எங்கே? என்று சிவரஞ்சனியிடம் தியாகராஜன் கேட்டார். அப்போது அவர், 2 குழந்தைகளையும் தொட்டிக்குள் தூக்கிப்போட்டு விட்டு, உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தியாகராஜனும், அவருடைய அண்ணனும் சிவரஞ்சனியை பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்து விட்டு, உறவினர்களின் துணையுடன் தொட்டிக்குள் இறங்கி குழந்தைகளை தேடினார்கள்.

8 அடி ஆழம் கொண்ட அந்த தண்ணீர் தொட்டியில் 6 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்ததால் குழந்தைகளை உடனே கண்டு பிடிக்க முடியவில்லை. பின்னர் தண்ணீர் தொட்டிக்குள் இருந்த தண்ணீரை வெளியேற்றி விட்டு தேடிபார்த்தபோது தொட்டியின் அடியில் ஸ்ரீஹர்சந்த் மற்றும் குழந்தை ஹர்சிதா ஆகியோர் இறந்த நிலையில் கிடந்தனர். இது குறித்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசாமி மற்றும் போலீசார் விரைந்து சென்று குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிவரஞ்சனி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக சிவரஞ்சனியின் பெற்றோர் மங்கலம் போலீசில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் தூக்கிப்போட்டு கொன்று விட்டு சிவரஞ்சனி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்று இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Next Story