மண்ணச்சநல்லூர் அருகே ஆற்றங்கரையில் அழுகிய நிலையில் ஆண் பிணம்


மண்ணச்சநல்லூர் அருகே ஆற்றங்கரையில் அழுகிய நிலையில் ஆண் பிணம்
x
தினத்தந்தி 14 July 2018 3:00 AM IST (Updated: 14 July 2018 1:38 AM IST)
t-max-icont-min-icon

மண்ணச்சநல்லூர் அருகே ஆற்றங்கரையில் அழுகிய நிலையில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டு மணலில் புதைக்கப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமயபுரம்,

மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன், சப்- இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அங்கு மணலில் புதைக்கப்பட்டிருந்த உடலை நாய் தோண்டி வெளியே இழுத்து போட்டிருந்தது தெரியவந்தது. இறந்து கிடந்தவர் பச்சை மற்றும் கருப்பு நிறம் கலந்த பனியன் அணிந்திருந்தார். கையில் கருப்பு கயிறு கட்டியிருந்தார். அவருடைய தலைப்பகுதி மண்டை ஓடாக காட்சி அளித்தது. உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதனால் அவர் இறந்து 20 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கும் என்று போலீசார் கருதினர். அவருடைய உடல் கிடந்த இடம் அருகே மூன்று காலி மதுபாட்டில்கள் கிடந்தன.

இதையடுத்து போலீஸ் மோப்ப நாய் ஸ்பார்க் திருச்சியில் இருந்து வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி, மீண்டும் அங்கேயே வந்து நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் தடயவியல் நிபுணர்களும் அங்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் இறந்து கிடந்தவரின் உடலை, போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்தும், காதல் விவகாரத்தில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது திருட்டுத்தனமாக மணல் அள்ளும்போது ஏற்பட்ட மோதலில் கொலை செய்து உடல் புதைக்கப்பட்டதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story